செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்குகிறது!
இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி சென்னை வருகை!
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தர உள்ளார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிறார். இதனையடுத்து சென்னை முழுவதும் 22000 போலீசார் கண்காணிப்பில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!
செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 68வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,117 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் 1,803 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 35,37,895ஆக அதிகரித்துள்ளது. 2,233 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34,85,579 ஆக அதிகரித்துள்ளது.
5ஜி அலைக்கற்றை.. 3வது நாளாக தொடரும் ஏலம்!
5ஜி அலைக்கற்றை 2-வது நாள் ஏலம் நேற்று நடந்தது. 9 சுற்றுகள் முடிவில் இதுவரை ரூ.1.49 லட்சம் கோடி அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக 3வது நாள் ஏலம் இன்று நடைபெறுகிறது.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் தர்ணா!
இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நேற்று 50 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் இரவு முழுவதும் காந்தி சிலை அருகே அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் தொடர்ந்த வழக்கில் விசாரணை!
பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் கடந்த 13ஆம் தேதி தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 28) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
காமன்வெல்த் போட்டி இன்று துவக்கம்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 215 தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டு நடந்த போட்டியில், ஆஸி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு டீசர்!
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.