தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

அரசியல்

“அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது” என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 9) நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நினைவலைகளைக் கொண்டு செல்வீர்கள்

இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் சென்னையிலிருந்து செல்லும்போது இந்த விளையாட்டை மட்டுமல்லாமல், தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு உள்ளிட்டவற்றின் நினைவலைகளையும் கொண்டுசெல்வீர்கள்.

திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்ற ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மினி விளையாட்டு அரங்குகள்!
உலக அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டுக்கும் மாநிலத்துக்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதி நவீன விளையாட்டுக் கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகள் அளிப்பதற்கான திட்டத்தை பெரிய அளவிலே விரிவுபடுத்தவுள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குத்துச் சண்டை அகாடமிகள்

ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு, மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை தமிழக அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வடசென்னையிலும் கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன. தமிழர்கள் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவலுக்கு பிரம்மாண்டமாக தனி விளையாட்டுக் களம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆசியாவின் கடற்கரை விளையாட்டுகளையும், WTA விளையாட்டுகளையும் சென்னையில் நடத்த முயற்சித்து வருகிறோம்.

முதலமைச்சர் கோப்பை

விளையாட்டுகளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கும் கவனம் செலுத்தி வருகிறோம். சிலம்பாட்டத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம். குழந்தைகள், இளைஞர்களின் விளையாட்டுகளை ஊக்குவிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

12 ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு எண்ணற்ற வீரர்கள் தங்கள் பாதையாக தேர்ந்தெடுக்க உதவும்.

நவீன தேவைகளுக்கேற்ப விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ஜெ.பிரகாஷ்

செஸ் பழம்: யார் இந்த மானுவல் ஆரோன்?

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.