Resolutions passed in vck Conference

இந்தியாவின் 2ஆவது தலைநகர் சென்னை, ஆளுநர் பதவியை ஒழிப்போம் : விசிக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அரசியல்

திருச்சியில் நடைபெற்று வரும் விசிக மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி, சிறுகனூரில் விசிக சார்பில் இன்று (ஜனவரி 26) “வெல்லும் சனநாயகம்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.

முதலில், சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து வந்த சமத்துவ சுடர், மதுரை மேலவளவிலிருந்து வந்த சுதந்திரச் சுடர், தஞ்சை கீழ்வெண்மணியிலிருந்து வந்த சகோதரத்துவச் சுடர் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார் திருமாவளவன்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த சுடர் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து 33 தீர்மனங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதை விசிக தலைவர் திருமாவளவன் வாசித்தார்.

ஜனநாயகம் காக்க உயிரீந்த ஈகியருக்கு வீர வணக்கம்.

நூற்றாண்டு காணும் பேராளுமைகள் கலைஞர், எல்.இளையபெருமாள், சத்தியவாணி முத்து ஆகியோருக்கு வீர வணக்கம்.

பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு.

முழுதாகக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலைத் திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசின் நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ராமர் கோயில் திறப்புவிழா நடந்துள்ள நிலையில் மசூதிக்கான கட்டுமானப் பணி துவக்கப்படவே இல்லை. உச்சநீதிமன்ற ஆணையின்படி மசூதிக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மணிப்பூரில் மாநில பாஜக அரசின் ஆதரவோடு நடைபெற்றுவரும் இன அழித்தொழிப்பு வன்முறையை இம்மாநாடு கண்டிக்கிறது. மணிப்பூரில் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும், பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகள் தடையின்றிக் கிடைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை ஒன்றையும், நாடாளுமன்றக் கட்டடம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

ஒன்றிய அரசு நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்.

நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் சதித் திட்டத்தை இம்மாநாடு கண்டிக்கிறது.

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

100 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாமளிக்கும் வாக்குக்கு ஒப்புகை சீட்டைப் பெற்று அதை சரி பார்த்து, வேறு ஒரு பெட்டியில் இட வேண்டும். தேர்தல் முடிவானது அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட வேண்டும்.

2026 ஆம் ஆண்டோடு இப்போதுள்ள தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு செய்யப்படும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இப்போதே வந்துவிட்டது. மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, தொகுதிகள் பிரிக்கப்படுவதால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் குறையும் எனத் தெரிகிறது.

இதனால், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இதனால் மாநிலங்களுக்கு இடையே சமத்துவமற்ற நிலை உருவாகும். இதைத் தவிர்க்க மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றத் தாழ்வற்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாமல் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அளிக்கவேண்டும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் தற்போதைய கொலீஜியம் முறை சமூக நீதியைக் காப்பாற்றுவதிலும், பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதிலும் தோல்வி அடைந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நீதிபதி நியமனங்களில் சமூக நீதியை, பன்மைத்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும்.

வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்.

மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் .

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதைக் கைவிட வேண்டும்.

நிதிப் பகிர்வில் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து 16 ஆவது நிதிக் குழுவில் நிதிப் பகிர்வு நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை நிறுத்தவேண்டும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்விக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சொதப்பிய கில்… சீறிய ராகுல், ஜடேஜா : இந்தியா முன்னிலை!

பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0