ஹெச்.ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை… சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 2) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஹெச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்ததாகவும்,
கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் திமுக, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த புகாரின் அடிப்படையில் ஈரோடு நகர் காவல் துறை கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது.
விசாரணையின் போது, “பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை, எம்.பி கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து.
அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால்,
வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என்று ஹெச்.ராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,
பெரியார் மற்றும் கனிமொழி குறித்த இரண்டு பதிவுகளும் ஹெச்.ராஜாவின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்த நீதிபதி, ஹெச்.ராஜா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
மேலும், ஹெச்.ராஜாவுக்கு இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதம் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்தார்.
மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்… கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீபத்திருவிழா!
“அதிமுக ஆட்சியில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்” – எடப்பாடிக்கு அமைச்சர் வேலு பதிலடி!
6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்… எங்கே போகிறது தமிழகம்?- அன்புமணி
ஒரு லட்சம் மாணவர்களை என்சிசி-யில் சேர்க்கத் திட்டம்!