எட்டுவழிச் சாலை: மாறிமாறிப் பேசுகிறாரா ஸ்டாலின்? சட்டமன்ற ஆவணங்கள் கூறும் உண்மை! 

அரசியல்

எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக எதிர்த்ததாகவும், ஆளுங்கட்சி ஆனவுடன் அந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும் திமுக மீதும் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மீதும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, எட்டு வழிச் சாலை பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

chennai salem expressway

“சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,  8 வழிச் சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்யத் தான் சொன்னார்.

திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவு படுத்தித் தான் ஆக வேண்டும். நிலங்களை எடுத்துத் தான் ஆக வேண்டும்.

8 வழிச் சாலை வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. ஒன்றிய அரசின் திட்டம் இது. நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதிமுக அரசு பேசவில்லை.

அதை செய்யத் தான் சட்டமன்றத்தில் சொன்னோம். 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு. சாலை அமைக்கப்படுமா இல்லையா என அரசு தான் அறிவிக்கும்”என்று குறிப்பிட்டார்.

எட்டு வழிச் சாலை விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியது உண்மை., அதேநேரம் அமைச்சர் வேலு கூறியபடி அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்ன பேசினார் என்பதை தேடினோம்.

சட்டமன்றப் பதிவுகளில் எட்டு வழிச் சாலை பற்றி அன்றைய சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் தெளிவாக இருக்கின்றன.

2018  ஜுன் 11 ஆம் தேதி சட்டமன்றத்தில் எட்டு வழிச் சாலை பற்றிய விவாதம் வந்தது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து  பேசியபோது,

chennai salem expressway

“நான் சேலத்தில் இருப்பதால் என் மீது தேவையில்லாத குற்றச் சாட்டாக சுமத்துகிறார்கள். அம்மா அரசு கொண்டு வந்த சாலைப் பணிகளால் அதிகமான நிலங்கள் எடுக்கப்படுவதாகவும்   நிறைய பேர் பாதிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அது தவறானது” என்று பேசியிருக்கிறார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,  “சாலை  போடுவது தவறு என்று நான் வாதிடவில்லை. அந்தப் பிரச்சினையை சொல்லவில்லை.  நாங்கள் நிலம் எடுக்கப்படுவதைக் கூட தவறு என்று வாதிடவில்லை.

அதற்குரிய இழப்பீட்டை, அந்த சூழ் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது உள்ள மார்க்கெட் ரேட்டில்  நாம் கொடுக்கிறோம். அதைத் தவறு என்று நான் சொல்லவில்லை. நான் கேட்டது என்னவென்றால்…

தற்போது மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில்  மக்களை கன்வின்ஸ் செய்து ஒரு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி  அதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண  வேண்டுமென்ற அந்த அடிப்படையிலேதான்  நான் இந்த பிரச்சினையை முதலமைச்சரிடத்திலே நினைவுபடுத்துகிறேன்” என்று பேசினார்.

chennai salem expressway

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,  “எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஐ.பெரியசாமி, ‘இந்த எட்டு வழிச் சாலைத் திட்டம் இப்போது தேவைதானா என்று கேட்டிருக்கிறார்.

ஓர் உறுப்பினர் தன் தொகுதிக்கோ அல்லது பிற தொகுதிகளுக்கோ இது வேண்டும் என்று கேட்கலாமே தவிர, இந்தத் திட்டம் தேவைதானா என்று கேட்பது அர்த்தம் உள்ள கேள்வியா?” என்று கேட்டார்.

chennai salem expressway

அப்போது மீண்டும் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின்,  “துணை முதல்வர் அவர்கள் உறுப்பினர் கேட்ட கேள்வியை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சாலைத் திட்டங்கள் எல்லாம் நிலுவையில் இருக்கும்போது இந்த சாலைத் திட்டம் இப்போது தேவைதானா  என்ற அடிப்படையில்தான் கேட்டிருக்கிறார்.

சாலைகள் அமைப்பதை எந்த காரணத்தைக் கொண்டும் தடுப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.

2018 ஜூலை 9 ஆம் தேதி எட்டு வழிச் சாலைக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் பேசியபோது, 

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களின் நலத்தை  மையமாக வைத்துதான் தீட்டப்படுகின்றன.

அந்த வகையில்  மக்களும் தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். 

chennai salem expressway

மக்கள் மட்டுமல்ல, மக்களுக்காக பணியாற்றக் கூடிய அரசியல் கட்சிகளும்  திட்டம் பற்றிய  கருத்துகளை எடுத்துச் சொல்ல ஆய்வு நடத்த எல்லா உரிமைகளையும் படைத்ததாக இருக்கிறது.

குறிப்பாக சாலைத் திட்டத்தைப் பற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் கருத்தே சொல்லக் கூடாது என்று வாய்ப்பூட்டு பூட்டக் கூடிய வகையிலே இன்றைய காவல்துறை தொடர்ந்து பணிகளை செய்து வந்துகொண்டிருக்கிறது.

சாலைத் திட்டம் பற்றி விளக்கிட வேண்டுமென்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவருடைய நாடாளுமன்றத் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்க முடியாத நிலையில் அவர் தடுக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி பாலபாரதி மக்களை சந்திக்க சென்ற நேரத்தில் அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல செய்தி சேகரிக்க சென்ற தீக்கதிர் ஏட்டின் நிருபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதையெல்லாம் தாண்டி நள்ளிரவிலே வீடு புகுந்து விவசாயிகளை கைது செய்யக் கூடிய நிலையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் போராடினால் இந்த அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்பதுதான் என் கேள்வி.  

மக்கள் விருப்பத்துக்கு மாறாக ஒரு திட்டம் வருகிறது என்று சொன்னால் அந்தத் திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்கிட வேண்டும். அதைத் தடுப்பதற்கு அரசுக்கு என்ன நிர்ப்பந்தம் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 

ஆகவே ஓர் நிபுணர் குழுவை அமைத்து சேலம் பசுமை வழி சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையிலே நிறைவேற்ற இந்த அரசு முன் வரவேண்டுமென்று ஏற்கனவே நான் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய செய்தியாக வெளியிட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதே எட்டு வழி சாலை பிரச்சினை பற்றிய விவாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2019 ஜுலை 20 ஆம் தேதி நடந்தபோது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

chennai salem expressway

அவர், “எதிர்க்கட்சியை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தயாநிதிமாறன் எட்டு வழிச் சாலை மறுபடியும் வரவேண்டுமென்று பாராளுமன்றத்திலே பேசியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

chennai salem expressway

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த பதிலில்,  “நானும் அதைத்தான் சொல்கிறேன்.  திட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. திட்டம் வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரும் புதுடெல்லியில் நாடாளுமன்றத்திலே வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் இருக்கக் கூடிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எடுத்துச் சொன்னேனே தவிர வேறொன்றுமில்லை. போராடக் கூடியவர்களை அழைத்துப் பேச இந்த அரசு ஏன் தயங்குகிறது என்பதுதான் என் கேள்வி” என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

chennai salem expressway

இவை எல்லாம் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட வெளியீடுகளில் அரசு ஆவணங்களாகவே இருக்கின்றன.

எனவே எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்க்கவில்லை என்பதே ஆவணங்கள் கூறும் உண்மையாக இருக்கிறது. இந்த அடிப்படையிலேதான்  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து வெளியிட்டிருக்கிறார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.

வேந்தன்

விரைவில் 8 வழிச்சாலை? நிதின் கட்கரி தகவல்!

+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0

1 thought on “எட்டுவழிச் சாலை: மாறிமாறிப் பேசுகிறாரா ஸ்டாலின்? சட்டமன்ற ஆவணங்கள் கூறும் உண்மை! 

  1. முதல்வர் பொய் சொல்லி இருந்தால் சிக்கி இருப்பார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *