சென்னையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (ஜூன் 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
ஜி.கே.எம். காலனி 12ஆவது தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ஸ்டீபன்சன் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “செங்கை சிவம் மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் செங்கை சிவம்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னையை சுற்றிப்பார்த்தால், பெரும்பாலானவை திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தவையாக இருக்கும்.
கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழிப் பூங்கா, வள்ளுவர் கோட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்,டைடல் பார்க், ஓமந்தூரார் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டம் என திரும்பி பார்க்கும் பக்கமெல்லாம் சென்னையின் தேவையை தீர்த்து வைத்தவர் நூற்றாண்டு விழா காணும் கலைஞர்.
50 ஆண்டு காலத்துக்கு முன்பு அவர் கட்டிய அண்ணா மேம்பாலம் என்று அரை நூற்றாண்டு விழாவை கண்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ திட்டங்களை நமக்காக இன்றைக்கும் உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கக்கூடியவர்தான் கலைஞர். அவருடைய வழியில் தான் திமுக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாநகரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக 3184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பணிகள் பயனாக, சென்ற ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்திலிருந்து எப்படி காப்பாற்றப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். முன்பெல்லாம், மழை பெய்தால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும், வீட்டிற்குள் தண்ணீர் இருக்கும்.
மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று பத்திரப்படுத்துவோம். அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவோம்.
இது ஒவ்வொரு மழைக்காலத்தில் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நிலையை மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
மழைநீர் வடிகால் பணிகள் இன்றைக்கு வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மீதமிருக்கிறது.
அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கிற காரணத்தினால்தான், அதையும் தாண்டி மெட்ரோ திட்டம் வேறு செயல்படுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை.
ஆனால் அந்த சாலைகளை மேற்கொள்ளப்படக் கூடிய பணிகள் எல்லாம் விரைவில் சரிசெய்யவேண்டும், அதை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார் மு.க.ஸ்டாலின்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி தொடர்பு- அப்பல்லோ, சிம்ஸ் மருத்துவமனைகளில் ED ரெய்டு!