chennai police transfer minister sekar babu check

சென்னை போலீசில் அதிரடி மாற்றம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக்?

அரசியல்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றியும், குட்கா-கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் குறித்தும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக திமுக அரசை நோக்கி கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் சென்னை திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. Chennai police transfer minister sekar babu check

தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என எதாவது ஒன்று அரங்கேறி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் போதைப் பொருளான கஞ்சா, குட்கா, அபின் ஆகியவற்றின் புழக்கத்தைத் தடுத்து குற்றங்களை தடுக்க முடிவு செய்த, காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல் தரம் பிரித்து சேகரித்தார்.

டாப் டென் ரவுடிகள், A+ ரவுடிகள் ( இரண்டு கொலை வழக்குக்கும் மேல் உள்ளவர்கள்) வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் பட்டியலை எடுத்தவர், ’முக்கிய ரவுடிகள் யாரும் வெளியில் இருக்கக்கூடாது. அனைவரையும் பிடித்து சிறைக்குள் அனுப்புங்கள், அவர்களை சிறையில் வைத்து வழக்கு நடத்தி சட்டரீதியாக தண்டனை வாங்கி கொடுங்கள்’ என உத்தரவு போட்டார்.

இதையடுத்து தமிழகத்தில் மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், மண்டல ஐஜி, சரக டிஐஜி, மாவட்ட எஸ்பிகள் என அதிரடியாக களத்தில் இறங்கி கடந்த 60 நாட்களில் சுமார் 60 முக்கிய ரவுடிகளை பிடித்து சிறைக்குள் அனுப்பியுள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மேத்யூ என்ற முக்கிய ரவுடியை பிடித்துள்ளனர், இன்னும் ரவுடிகள் வேட்டை தொடர்ந்து கொண்டு இருப்பதால், சிறு ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களில் பதுங்கி வருகிறார்கள் அவர்களையும் கண்டுபிடித்து கைது செய்ய தயாராகி வருவதால் குற்றங்களும் குறைந்துள்ளதாக சொல்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

ஒருபக்கம் ரவுடிகளை பிடித்து உள்ளே போடும் அதேநேரம், போலீஸுக்குள்ளேயேயும் களையெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னை மாநகரத்தில் குற்றங்கள் நடைபெறுவதற்கு நுண்ணறிவுப் பிரிவு எனப்படும் ஐஎஸ் பிரிவில் உள்ள சிலரும், மாமூல் வாங்கும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களும் தான் காரணம்.

அதனால் அவர்களை களை எடுக்க சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்ட அஸ்ரா கார்க் தீவிரமாக செயல்பட்டார். எஸ் ஐ, இன்ஸ்பெக்டர், ஏசி என அதிகாரிகளை ஓப்பன் மைக்கிலேயே எச்சரித்திருந்தார். இது சென்னை போலீஸ் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் நாத்சிங் அதிரடியைக் காட்டினார்.

chennai police transfer minister sekar babu check

மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தனது ஸ்பெஷல் டீம் மூலமாக சென்னை போலீஸார் குறித்த சில முக்கிய விவரங்களை சேகரித்தார். நீண்ட வருடங்களாக சென்னை மாநகரத்தில் பணி செய்பவர்கள், அவர்களின் நடவடிக்கைகள், அதேபோல் ஐஎஸ் (நுண்ணறிவு) பிரிவில் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றும் ஏட்டு, எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் பட்டியல் எடுத்தார்

இதன் விளைவாக சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 80க்கும் மேற்பட்ட காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் 132 காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நுண்ணறிவு பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நுண்ணறிவு காவலர்களை அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நுண்ணறிவுப் பிரிவு காவலர்களில் பலர் சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் சேர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இதுவரையில் குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் சுமார் 25 பேர்களை இடமாற்றமும், காத்திருப்போர் பட்டியலிலும் வைத்துள்ளார். கடைசியாக நவம்பர் 28 ஆம் தேதி, வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், கோயம்பேடு மார்கெட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், ஜெ ஜெ நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அடையார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகிய நான்கு பேரை இடமாற்றம் செய்தும், நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இருவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளார் ஆணையர்.

போலீஸ் துறைக்குள் மட்டுமல்லாமல் சென்னை மாநகர அரசியல் வட்டாரத்திலும் இந்த அதிரடி நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

chennai police transfer minister sekar babu check

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “சென்னைக்கு பி.கே. சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் என இரு அமைச்சர்கள் இருந்தபோதும் இவர்களில் பவர்ஃபுல் அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு தான்.

அவரது மாவட்டத்தைத் தாண்டியும் சென்னை முழுவதும் அவர் செல்வாக்கு செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக சென்னை போலீஸில் அமைச்சர் சேகர்பாபுவின் கன்ட்ரோல் அதிகம். இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீஸாரில் பலர் சேகர்பாபுவுக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது அவரால் பணியமர்த்தப்பட்டவர்கள்.

அஸ்ரா கர்க் ஆலோசனையின் பேரில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை பற்றி அமைச்சர் சேகர்பாபுவிடம் பலர் புலம்பியிருக்கிறார்கள். போலீஸ் துறை முதல்வரின் துறை என்றாலும் சென்னை மாநகர போலீஸுக்குள் செல்வாக்கு பெற்றிருந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்த நடவடிக்கை என்ன மாதிரியான சிக்னல் என்று தெரியவில்லை” என்கிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடமே கேட்டுவிடலாம் என்று அவரைத் தொடர்புகொண்டபோது, சென்னை மழை தொடர்பான ஆய்வுப் பணிகளில் அமைச்சர் ரொம்ப பிசியாக இருக்கிறார் என்றனர் அமைச்சர் வட்டாரத்தினர்.

chennai police transfer minister sekar babu check

அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது,
“பொதுவாக அமைச்சரிடம் பல தரப்பினரும் உதவி கேட்டு வருவார்கள். தன்னால் முடிந்ததை செய்து கொடுப்பார். போலீஸ் தரப்பிலிருந்தும் அப்படி வருவதுண்டு. போலீஸ் துறை முதல்வர் வசம் இருக்கும் துறை. அதில் அமைச்சரால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறார்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பரந்தூர் விமான நிலையம்: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் போராட்டம்!

விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்!

Chennai police transfer minister sekar babu check

+1
0
+1
1
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

1 thought on “சென்னை போலீசில் அதிரடி மாற்றம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக்?

  1. காவல்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளன. களையெடுப்பு தொடரட்டும். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *