குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆஜராக உத்தரவு!

Published On:

| By Selvam

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை டெல்லி சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு எதிராகவும் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு பிழைகள் இருப்பதால் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைடுத்து சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மற்றும் மாதவராவ், உமாசங்கர் குப்தா ஆகிய ஐந்து பேர் ஆஜராகியிருந்தனர்.

இதனையடுத்து, “தற்போது புதிதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என்று தற்போது உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வயநாடு நிலச்சரிவு: நிதி அளிக்கும் நட்சத்திரங்கள்.. ரஜினி, விஜய், அஜித் மிஸ்ஸிங்!

”அமலாக்கத்துறைக்காக காத்திருக்கிறேன்” : ராகுல் காந்தி