திராவிட மாடல் மறைக்கும் மாடல் அல்ல: கொளத்தூரில் இருந்து குஜராத் அட்டாக்!

அரசியல்

“திராவிட மாடல் என்பது மறைக்கும் மாடல் அல்ல” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை இன்று (செப்டம்பர் 12) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர் நேரு பேசியபோது, ’நம் முதல்வர் தமிழகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தாலும் கொளத்தூர் என்றவுடன் அவருக்கு தனி உற்சாகம் வந்துவிடும்.

மகிழ்ச்சி பிறக்கும்’ என்றார். அவர் சொன்னதில் உண்மைதான். ஏன் மகிழ்ச்சி வராது? மூன்று முறை என்னைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்துள்ளீர்கள்.

அப்படிப்பட்ட உங்களை சந்திக்க நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தானாக வந்துவிடும். ஓர் எழுச்சி வந்துவிடும். எனக்கு சோர்வு வரும் நேரத்தில் இங்கே வந்தால் போதும், அந்த சோர்வு ஓடிவிடும்.

அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தபோது, சென்னையில் ஓலைக்குடிசைகளை மாற்றி ஆஸ்பெட்டாஸ் போன்ற வீடுகளைக் கட்ட ஆரம்பித்தபோது அந்தத் திட்டத்தில் முழுமையான திருப்தி ஏற்படவில்லை.

அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், இந்தியாவிலேயே முதன்முதலாக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

இன்றைக்கு அந்தத் திட்டம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு குடிசை மேம்பாட்டு வாரியம் என்ற பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியிருக்கிறோம்.

இதன்மூலம் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை மட்டுமல்ல ஒரு மலர்ச்சியையும் பார்க்கிறேன். திமுக ஆட்சி அமைந்ததற்காக நீங்கள் மகிழ்கிறீர்கள். உங்களுடைய மகிழ்ச்சிக்கு திமுக காரணமாக அமைந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

chennai kolathur chiefminister mk stalin visit and speech

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார் என ஒரு பழமொழி சொல்வார்கள். காரணம், அவ்வளவு கஷ்டம். ஆனால் இன்று திருமணம் பதிவுத் திருமண அலுவலகத்தில் முடிந்துவிடுகிறது.

சிலர், அவர்களே முடிவு செய்து திருமணம் செய்துகொள்கிறார்கள். வீடு என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதில் எங்களுக்குப் பெருமை. இன்று கொளத்தூர் கெளதமபுரத்தில் பழைய வீடுகள் எல்லாம் அகற்றப்பட்டு 800 வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

குடிசையை மாற்றி கட்டடம் கட்டுவது மட்டும் நோக்கமல்ல. இந்த நகர்ப்புற மக்களின் வாழ்க்கையும் மேம்பட வேண்டும். வாழ்விடமும் மேம்பட வேண்டும்.

வாழ்க்கைத்தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு. அதனால்தான் இதை திராவிட மாடல் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நாட்டில், ஒருசில மாநிலங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களின் கண்களில்படாதவாறு குடிசைகள் தார்பாய் போட்டு மறைக்கப்பட்டன.

(அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்தபோது அவர் கண்ணில் படக் கூடாது என்று குடிசைகள் முன்பு உயரமான சுவர் எழுப்பி மறைக்கப்பட்டதாக செய்தி வந்தது. அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்)

ஆனால், நம்முடைய மாடல் என்பது மறைக்கும் மாடல் அல்ல. அதனுடைய அடையாளம்தான் இந்த கெளதமபுரத்தின் அடுக்குமாடி குடியிருப்பு. ’ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்றார் அண்ணா. அவருக்குப் பின் கலைஞர், ’ஏழையின் சிரிப்பில் அண்ணாவின் முகத்தைக் காண்போம்’ என்றார். இப்போது நான் சொல்கிறேன், ’ஏழையின் சிரிப்பில் கலைஞரின் முகத்தைக் காண்போம்’ ” என்றார்.

ஜெ.பிரகாஷ்

‘நீங்களே ஒரு டெம்ப்ரவரி தான்’: எடப்பாடியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *