எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By christopher

hc on edappadi tender case

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 18) தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக அரசின் முந்தைய ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்தது.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை முறையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேநேரம், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் தனது மனுவை வாபஸ் பெறக்கோரிய  ஆர்.எஸ்.பாரதியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி,

ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் எடப்பாடி மீதான வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

உம்மன் சாண்டி மறைவு: கேரள முதல்வர் உருக்கம்!

உம்மன் சாண்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel