எடப்பாடி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published On:

| By christopher

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவிற்கு எதிரான வழக்கு விசாரணை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை எடப்பாடி பழனிசாமி தவறாக தெரிவித்துள்ளார் என்று,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இதில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக புகார் அளித்துள்ள மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல என்றும்,

வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகு அவசர கதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து காவல்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணயை வரும் ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பலத்த எச்சரிக்கையை மீறி வெளியாகிறது ’தி கேரளா ஸ்டோரி’

’செந்தில்பாலாஜியை நீக்குங்கள்’: முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share