அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது. கூடவே அவரது தம்பி அசோக் குமாரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது 4 மாதங்களாக புழல் சிறையில் உள்ளார்.
அவரது தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று (அக்டோபர் 19) தள்ளுபடி செய்யப்பட்டது.
அக்டோபர் 9 ஆம் தேதி திடீர் உடல் நலக் குறைவால் அவர் புழல் சிறையில் இருந்து அதிகாலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரது கால் மரத்துப் போனதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் புழல் சிறைக்குத் திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி செந்தில்பாலாஜியின் உடல் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 16ஆம் தேதி வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அமலாக்கத்துறை சார்பிலோ, “செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். தற்போது துறையில்லாத அமைச்சராக இருக்கும் அவர், ஜாமீனில் சென்றால் அவர் வழக்கு விசாரணையை சீர்குலைக்க முயற்சிப்பார் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது இன்று (அக்டோபர் 19) நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில்,
”செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளது.
அமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது நிலுவையில் உள்ளது. அவரை கைது செய்வது அவசியம்.
அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. மருத்துவ காரணங்கள் ஏற்கும் வகையில் இல்லாததால் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கேட்கப் போய் அந்த மனு தள்ளுபடியான நிலையில்,
அவரது தம்பி அசோக் குமாரையும் கைது செய்வது என்று அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!