அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான விசாரணை, இன்று (ஆகஸ்ட் 4) நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை (ஆகஸ்ட் 3) அதிமுக பொதுக்குழு வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளித்திருந்தார்.
அதுபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தும், தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி, இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு முறையீடாக வைத்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. எனினும் தொடர்புடைய நீதிபதிக்கு இந்த விஷயத்தை தெரிவித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைப்பதற்கு ஏதுவாக அவகாசம் வழங்க வேண்டும். வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
நீதிபதி கேள்வி!
அவருடைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு (ஆகஸ்ட் 5) ஒத்திவைத்தார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம், ‘எதற்காக இந்த வழக்கில் நீங்கள் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதியிடம் முன்வைத்தீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு, ”ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தனிப்பட்ட முறையில் விஷயங்கள், கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு அளித்திருந்தோம்” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ”இதுபோன்ற செயல்பாடுகள் என்பது கீழ்த்தரமானது. உங்களுடைய செயல் என்பது நீதித்துறையை களங்கப்படுத்தக்கூடியது” என தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்ததுடன் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
மேலும் அவர், “ஜூலை 11ம் தேதி உத்தரவில் குறிப்பிட்ட கருத்துகளை நியாயப்படுத்தும் வகையிலேயே உங்கள் தரப்பு செயல்பாடு உள்ளது. ஒருவேளை, இந்த தீர்ப்பில் தவறு இருந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம். அதைவிடுத்து தலைமை நீதிபதியிடம் சென்று, வேறு நீதிபதியை மாற்றச் சொல்லி முறையீடு செய்தது என்பது நீதித்துறையை களங்கப்படுத்தக்கூடிய செயல்” என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை நாளை (ஆகஸ்ட் 5) பிற்பகல் தொடங்க இருக்கும் நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் எனத் தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
விவசாயத்தை அழித்து விமான நிலையமா? சீமான் கண்டனம்!