அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் புதன் கிழமை (நவம்பர் 15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் பெயர், சின்ன, கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு ஆர். மகாதேவன், முகமது ஷெரீஃப் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. வரும் நவம்பர் 15 ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.
”இதற்கு மேல்முறையீடு செய்த அன்று மனுத் தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், ஓபிஎஸ் எப்போதும் பயன்படுத்தும் காரின் முன்புறத்தில் இருந்த அதிமுக கொடியை அகற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்டன்: அடித்து சொல்லும் கங்குலி