இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், அதிமுக, நாதக என பல்வேறு கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கர்வர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்தபோது, 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்களில், சுமார் 7,000 இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. மேலும் 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில், “இடைத்தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தான் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணி பாதுகாப்பை பொறுத்தவரைக்கும் 409 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவித ஆதாரமும் இன்றி வெறும் அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வரும் 20ம் தேதி தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையும் 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மகா சிவராத்திரி: இறைச்சி விற்பனைக்கு தடை!
“வேலை முடிஞ்சிருச்சு வீட்டுக்கு போங்க”: வைரலாகும் ஐடி நிறுவனத்தின் வார்னிங்!