கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: எடப்பாடிக்கு சம்மன்!
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 15) சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தன்னை பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை ரத்து செய்ததற்கு தடை விதித்ததோடு, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
“ஆளுநரின் அப்பாவுடைய சொத்தை கேட்கவில்லை”: தமிழிசைக்கு உதயநிதி பதில்!
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!