வைஃபை ஆன் செய்ததும் சென்னையின் வெள்ளக் காட்சிகளும் மக்களின் போராட்டக் காட்சிகளும் இன்பாக்சில் வந்து விழுந்தன. dmk ministers hand with district secretaries
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னையில் புயல், மழை, வெள்ளத்தின் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என சென்னையின் கணிசமான பகுதிகள் வெள்ள சென்னையாக மாறியிருக்கின்றன.
திங்கள் கிழமை இரவு முதல் கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை இல்லை. ஆனால் இன்றும் கூட வேளச்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, வடசென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை.
வெள்ளம் வடியாதது ஒரு பக்கம் என்றால், தண்ணீர் தேங்கியிருக்கும்போது மின் இணைப்பு கொடுப்பது பாதுகாப்பற்றது என்பதால் மின் விநியோகத்தை படிப்படியாகவே வழங்கி வருகிறது மின்சார வாரியம். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சென்னை மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னையை பகுதி பகுதியாக பிரித்து 13 அமைச்சர்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை செய்ய உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதுரை மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையின் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வெளியூர் அமைச்சர்களுக்கு சென்னையின் லோக்கல் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் தங்களை இதில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே தேட வேண்டியிருந்தது.
சென்னைக்குள் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் இருந்தும் தாங்கள் பொறுப்பு அமைச்சர்களாக இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பும்படி உத்தரவிட்டதால் அவை அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அமைச்சர் நேரு தான் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சேலத்தில் இருந்தும், தனது மாவட்டமான திருச்சியில் இருந்தும் நிவாரணப் பொருட்களை வேகமாக வரவழைத்தார். டிசம்பர் 5 ஆம் தேதியே சேலம் மாவட்ட நிர்வாகத்தினர் ரொட்டி, பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை இரவு 1 மணி அளவில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் வாகனம் சென்னைக்கு புறப்பட்டு காலை வந்தது.
இன்னொரு பக்கம் அமைச்சர் எ.வ.வேலு தனக்கு கொடுக்கப்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதி மக்களுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும், தான் பொறுப்பு அமைச்சராக இருக்கக் கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தும் நிவாரணப் பொருட்களை வரவழைத்தார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க.கார்த்திகேயன் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி, பழங்கள், பிரெட் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், ரஸ்க் பாக்கெட்கள், பால் பாக்கெட்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், புடவை, சட்டை உள்ளிட்ட துணி வகைகள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை 7 லாரிகளில் இரவோடு இரவாக சென்னைக்கு அனுப்பி வைத்து… நேற்று அதிகாலையில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பொக்லைன் இயந்திரத்தில் நின்ற படியே வீதி வீதியாக சென்று, வீடு வீடாக நிவாரணப் பொருட்களை அவர் வழங்கி வருகிறார்.
இந்த வகையில் சென்னை லோக்கல் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பை விட அமைச்சர்களுக்கு தத்தமது மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பே அதிகம்.
சென்னை புறநகர் மற்றும் வட சென்னை பகுதி மக்களுக்கு கடந்த மூன்று நாட்களாக வெள்ளம் வடியவில்லை என்ற கோபம் என்றால், ஒரு பால் பாக்கெட் கூட கிடைக்கவில்லை என்பதுதான் மேலும் கோபமாக இருக்கிறது.
சென்னை முழுவதும் பால் தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த நிலையில், இன்று டிசம்பர் 7 ஆம் தேதிதான் சற்று இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம், ‘பால் விநியோகிப்பதில் என்ன சிக்கல்? ஏன் நமக்கு இந்த கெட்ட பெயர்?’ என்று கேட்டிருக்கிறார். சென்னையில் அம்பத்தூர் ஆவின் பிளான்ட் வெள்ளத்தில் முடங்கிவிட்டது. மாதவரம், சோழிங்கநல்லூர் ஆவின் ப்ளான்ட்டுகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை காரணமாக போதிய பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யமுடியவில்லை.
ஆந்திராவிலும் புயல் அடித்ததால் அங்கிருந்து தனியார் நிறுவனங்கள் மூலமும் பால் இறக்குமதி செய்ய முடியவில்லை என்றெல்லாம் முதல்வருக்கு விளக்கம் தெரிவிக்கப்பட்டாலும்… இதையெல்லாம் ஏற்காமல் முதல்வர் கொதிப்படைந்துவிட்டார்.
கடந்த மாசெக்கள் கூட்டத்தில்தான், ‘இலவச பஸ் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை போன்றவற்றால் பெண்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது’ என்று பேசியிருந்தார் முதலமைச்சர். ஆனால் இந்த புயல் நேரத்தில் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பால் பாக்கெட் கூட இல்லை என்ற நிலையால் சென்னையில் ஏற்பட்ட இந்த பாதிப்பு… தமிழகம் முழுக்க கருத்து ரீதியாக பெண்களிடம் எதிரொலிக்கிறது என்ற தகவலும் முதல்வருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மாலைதான் தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பால் நிறுவனங்களிடம் ஆலோசனையைத் தொடங்கியிருக்கிறார். இந்த புயல் நிவாரணப் பணிகளில் முதல்வரின் அதிருப்தியை அதிகம் சம்பாதித்திருப்பது பால் வளத்துறைதான் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவின் நடிக்கும் “ஸ்டார்” படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
இயல்பு நிலைக்கு திரும்பிய புறநகர் மின்சார ரயில் சேவை… ஆனால்!
dmk ministers hand with district secretaries