செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என்றால்… : நீதிமன்றம் எச்சரிக்கை!
குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை(ஆகஸ்ட் 8) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிவுக்காக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக இருப்பதால் தலைமை நீதிபதி முன்பு இந்த மனு எண்ணிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி அல்லி, எத்தனை முறை தான் தள்ளி வைப்பது. அந்த மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில், மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி எப்படி குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்..
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், இந்த மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி குற்றச்சாட்டு பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் படுத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கிற்கும் குற்றச்சாட்டு பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியை ஏன் ஆஜர்ப்படுத்தவில்லை என்று புழல் சிறைக்கு போன் செய்து நீதிபதி கேட்டார்.
இதற்கு புழல் சிறை சார்பில், செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஜர்ப்படுத்த இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து காணொளி காட்சி மூலம் ஏன் குற்றச்சாட்டை பதிவு செய்யக்கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். இல்லையெனில் காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்த நீதிபதி அல்லி வழக்கை நாளை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பிரியா
”தகுதியிழப்பால் உங்கள் சாதனையை குறைக்க முடியாது”: வினேஷ்க்கு ஸ்டாலின், உதயநிதி ஆறுதல்!
7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!