பிபிசியின் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை 2 பாகங்களாக பிபிசி வெளியிட்டுள்ளது.
இதனை யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து மத்திய அரசின் உத்தரவின்படி, பிபிசி பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டது.
எனினும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, டெல்லி, மேற்குவங்காளம், தமிழ்நாடு என நாடு முழுவதும் மாணவ அமைப்புகள் மூலம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தடைவிதிக்கப்பட்ட ஆவணப்படத்தை பொதுவெளியில் பொதுமக்களுக்கு திரையிடும் சம்பவமும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் தா.பி.சத்திரம் அம்பேத்கர் சிலை அருகே ஒன்றுகூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ’அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்’ என கோஷம் எழுப்பினர்.
இதில் சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினியும் கலந்துகொண்டார். இவர் தான் சென்னையில் இளம் கவுன்சிலர் ஆவார்.
தொடர்ந்து சாலையோரம் அமர்ந்து செல்போனில் மத்திய அரசு தடைசெய்த ஆவணப்படத்தை பார்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பி.சத்திரம் போலீசார் கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்தனர்.
பின்னர் கைதானவர்களை உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்தும்படி எச்சரித்த போலீசார் அனைவரையும் விடுதலை செய்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மரணம்
விவசாயிகளுக்கான மாபெரும் போட்டி இந்தாண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி