இன்று (ஜூன் 14) சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரை நேரில் சந்தித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் உட்கட்சி பூசல் இருந்து வந்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
முன்னதாக, அண்ணாமலை குறித்து தமிழிசை பேசிய கருத்து, தமிழக பாஜக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் நடந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கும் தொனியில் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து நேற்று (ஜூன் 13) தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், மக்களவை தேர்தலுக்கு பிறகான பணிகள் மற்றும் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமித்ஷா என்னிடம் கேட்டறிந்தார்.
அப்போது, அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மிகுந்த அக்கறையுடன் அமித்ஷா அறிவுரை கூறினார்” என விளக்கமளித்திருந்தார்.
ஆனால், அண்ணாமலையும், தமிழிசையும் இருதுருவங்களாக இருப்பதாக கட்சிக்குள் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இருவரிடையேயும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை காண்பிப்பதற்காக தமிழிசை, அண்ணாமலை இருவரும் ஒன்று சேர்ந்து பாஜக நிகழ்ச்சிகளில் இன்று கலந்துகொள்ளுமாறு தலைமை நேற்று அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக தமிழிசை – அண்ணாமலை ஒன்றாக போஸ் கொடுக்க உத்தரவு என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டிற்கு அண்ணாமலை நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். இதன்மூலம், தமிழிசை-அண்ணாமலை இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாட்டில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி?
சென்னையில் மழை எப்போது? வானிலை மையம் சூப்பர் அப்டேட்!