மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் அக்டோபர் 6ஆம் தேதி பிரமாண்ட போர் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிலையில் 30க்கும் மேற்பட்டோர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மயக்கமடைந்தனர். இவர்களில் 5 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்தசூழலில் தமிழக அரசு உரிய அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
“மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும் – போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ வான் சாகச நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும், பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன” என்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் விடுமுறை: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
டாப் 10 செய்திகள் : கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு முதல் கனமழை வரை!
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?
ஹெல்த் டிப்ஸ்: இள வயதில் முதுகுவலி.. என்ன காரணம்? தீர்வு உண்டா?