அதிமுக அலுவலக சீல் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை வழங்கியது தொடர்பாக, மேல்முறையீடு செல்வோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு, விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில், இன்று (ஜூலை 20) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்கு தொண்டர்களை அதிமுக அலுவலகத்துக்கு அனுமதிக்கக்கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் திருமாறன் இன்று (ஜூலை 20) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
”அதிமுக அலுவலகம் தொடர்பாக இந்த வழக்கில், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145ன் கீழ் 9 பிரிவுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்து யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுத்து, அந்த சீலை அகற்றி அவரிடம் கொடுக்கலாம் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்தில் அதுதொடர்பான ஆவணங்கள், சான்றுகள், ஆதாரங்களும் வைக்கப்படாத சூழ்நிலையில், வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரத்தை இந்த நீதிமன்றம் தனது அதிகாரமாக பயன்படுத்தியுள்ளது. எனவே, இது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இது, உடனடியாக மேல்முறையீடு செய்யத் தகுந்த வழக்கு. இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதி எதிர்தரப்பிடம் சாவியை ஒப்படைத்தாலும், இன்றைய தேதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் யாரும் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த சொத்து தொடர்பாக எந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று. இந்த சொத்து சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு எந்தவிதமான அதிகாரமும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கிடையாது. இந்த வழக்கு தொடர்பாக, நிச்சயமாக மேல்முறையீடு செல்வோம். பகுதியாக அனுமதித்து, பகுதியாக சாவியை ஒப்படைப்பது என்பது இந்திய சட்டங்களுக்கு எதிராக உள்ளது. இந்த நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அல்லது சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களை தன் கையில் எடுத்து, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர் சிவில் நீதிமன்றங்களுக்குத்தான் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பு அதுபோன்று கேள்வி வைக்கப்படவே இல்லை. அதற்கான வாதங்களும் வைக்கப்படவில்லை. அதற்கான ஆவணங்களும் கொடுக்கப்படவில்லை” என்றார்.
ஜெ.பிரகாஷ்