அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எப்போது செல்கிறார் எடப்பாடி?

Published On:

| By Prakash

சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் அதன் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடிக்கே உரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 20) தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இருதரப்பும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கின் மீது நீதிபதி சதீஷ்குமார் முன்பு, விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 20) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலகத்தை வழங்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.
தற்போது அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகி இருக்கும்நிலையில்,

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜராகி வாதாடிய இன்பதுரை, இன்று (ஜூலை 20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதுடன் அதற்கான சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தவிர, அதிமுக அலுவலகத்துக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்காததால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே 145 மற்றும் 146 ஆகிய பிரிவுகளில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இவற்றையெல்லாம் நீதிபதி சீர்தூக்கி ஆராய்ந்து, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்” என்று கூறினார் இன்பதுரை.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஒரு மாதத்துக்கு தொண்டர்கள் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டது தொடர்பாக பதிலளித்த இன்பதுரை, ”நீதிபதியின் உத்தரவு நகல் வந்தால்தான் அதுகுறித்து முழுமையாக தெரியும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எப்போது செல்வார் என்ற கேள்விக்கு,

“கட்சி அலுவலகத்துக்கு செல்வது குறித்து தலைவர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பர்” என்றார் இன்பதுரை.

தீர்ப்பை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக செல்ல இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. வரும் ஜூலை 25 ஆம் தேதி வருவாய் துறை இந்த விவகாரத்தில் இரு தரப்பையும் ஆஜராக சொல்லியிருந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை வருவாய் துறையிடம் எடுத்துச் சொல்லி, வருவாய் துறையிடம் இருந்தும் தங்களுக்கு சாதகமான முடிவை பெற ஆயத்தமாகிவிட்டது எடப்பாடி தரப்பு.

அதற்குள் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்து எடப்பாடிக்கு செக் வைக்க மீண்டும் தயாராகிறார் ஓபிஎஸ்.


ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel