சீமானுக்கு வரிசைக்கட்டும் சம்மன்கள்!

Published On:

| By vanangamudi

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் கடலூரில் பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து சீமான் மீது திராவிடர் கழக கடலூர் மாவட்ட செயலாளர் தண்டபாணி வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. chengalpattu police send summons

இந்த வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்ற நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் பிப்ரவரி 14-ஆம் தேதி வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் கொடுத்தார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சம்மன்… போலீசிடம் சீமான் வாக்குவாதம் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் பி.என்.எஸ் 504, 505, ஐபிசி 153 (ஒருதரப்புக்கு கோபத்தை தூண்டும் வகையில் பேசுவது, ஒரு பிரிவினரை வேண்டுமென்றே இழிவாக பேசுவது, மோதலை உருவாக்கும் வகையில் வதந்திகளை பரப்புவது) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் ஆலோசனையின் படி செங்கல்பட்டு டவுன் காவல் நிலைய போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்று பிப்ரவரி 15-ஆம் தேதி ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் அளித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். சட்டப்படி முதலில் அவருக்கு சம்மன் கொடுக்கிறோம்.

சம்மனில் குறிப்பிட்ட நாளில் அவர் நேரில் ஆஜராகி பதில் அளிக்கவில்லை என்றால், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து சம்மன் அனுப்புவோம். அதற்கும் ஆஜாராகவில்லை என்றால் நேரடியாக கைது தான்” என்றார்கள் அழுத்தமாக.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, தமிழகம் முழுவதும் சீமான் மீது சுமார் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது மூவ்மென்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் கண்காணிப்பில் சீமான் என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தொடர்ந்து திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சீமானுக்கு சம்மன் வரிசை கட்டி வர இருக்கிறது. chengalpattu police send summons

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share