தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில்… அதை எதிர்த்து, தலைமை நீதிபதி இல்லாமலேயே தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக சட்டத்தை 2023 இல் கொண்டு வந்தார் பிரதமர் மோடி. Cheif ECI Who is Gyanesh Kumar?
தலைமை தேர்தல் ஆணையர் என்பவர் முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே கைப்பாவையாக இருக்க வேண்டும் என்பதால்தான் சர்ச்சைக்குரிய சட்டம் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக எச்சரித்தன.
சர்ச்சைக்குரிய பெருமை! Che

இந்த சட்டத்தின்படியான முதல் தலைமை தேர்தல் ஆணையர் என்ற ‘சர்ச்சைக்குரிய பெருமை’யை பெறுகிறார் ஞானேஷ்குமார். if ECI Who is Gyanesh Kumar?
இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் (பிப்ரவரி 18) ஓய்வு பெறும் நிலையில்… நேற்று (பிப்ரவரி 17) டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்ட தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஐந்து பெயர்கள் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன.
அப்போது ராகுல் காந்தி, “தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நாளை மறுநாள் பிப்ரவரி 19 உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ஏன் இன்றே (பிப்ரவரி 17) இந்த கூட்டத்தைக் கூட்டுகிறீர்கள்? கூட்டத்தை ஒத்திவையுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், குழுவின் மற்ற உறுப்பினர்களான பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதை ஏற்கவில்லை. அவர் ஞானேஷ்குமாரை தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்தனர்.
நான் ஏன் போகணும்? ராகுல் Cheif ECI Who is Gyanesh Kumar?
சில நாட்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும்போது, “தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்துக்கு நான் செல்ல இருக்கிறேன். ஆனால் நான் அங்கே எதற்காக செல்லவேண்டும்? பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருவார்கள். நான் அங்கே சென்று என்ன ஆகப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதுதான் இந்த கூட்டத்திலும் நடந்திருக்கிறது.

மோடியும், அமித் ஷாவும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை தேர்ந்தெடுக்க, நேற்று இரவே குடியரசுத் தலைவர் இதற்கான உத்தரவு பிறப்பித்து அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறார்.
யார் இந்த ஞானேஷ்குமார்? Cheif ECI Who is Gyanesh Kumar?
1964 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் பிறந்தவர் ஞானேஷ்குமார். உயர் கல்வியை முடித்த பின், கான்பூரில் ஐ.ஐ.டி.யில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் படித்தார். அதன் பின் அவர் ICFAI எனப்படும் Institute of Chartered Financial Analysts of India இல் பிசினஸ் ஃபைனான்ஸ் பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் படித்தார்.
உலகளாவிய அறிவு பெற்ற ஞானேஷ்குமார், 1988 ஆம் ஆண்டு கேரளா கேடரில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார்.
அவர் கேரள அரசாங்கத்தில் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராக முதலில் பதவி வகித்தார். பின் அடூர் துணை ஆட்சியர், கேரள மாநில SC/ST மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் ஆணையர் மற்றும் பிற பதவிகளை வகித்துள்ளார். 2003 இல் கொச்சியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
அதன் பின் கேரள மாநில அரசின் நிதித்துறை, பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். அதன் பின் மத்திய அரசுப் பணிக்குத் திரும்பினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2007 முதல் 2012 வரை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பதவி வகித்தார். அதன் பின் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார். நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றினார். அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தபோது உள்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றினார் ஞானேஷ்குமார்.
அமித் ஷாவின் கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்து கடந்த 2024 ஜனவரி 31 ஆம் தேதி பணி ஓய்வுபெற்ற ஞானேஷ்குமார், ஒரே மாதம் கழித்து அதாவது 2024 மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமித் ஷாவின் முக்கிய கனவுத் திட்டங்களை செயல்படுத்தியவர் ஞானேஷ்குமார் என்று வர்ணிக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
காஷ்மீர் 370 ரத்து செய்யப்பட்டதில் முக்கிய பங்கு!
பாஜகவின் மூன்று முக்கிய முழக்கங்களில் ஒன்றான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதில் டிப்ளமேட்டிக்காக முக்கிய பங்கு வகித்தவர் ஞானேஷ்குமார்.
உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் காஷ்மீர் டிவிஷனுக்கு தலைமை அதிகாரியாக அப்போதைய இணைச் செயலாளர் ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார். காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாகவும், அதன் பிறகான காஷ்மீரின் மறு உருவாக்கம் தொடர்பாகவும் டிராஃப்ட் தயாரித்ததில் ஞானேஷ்குமாரின் பங்கு முக்கியமானது. அந்த சட்ட மசோதாவைத்தான் 2019 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட பின்னரும் அந்த மாநிலம் தொடர்பான விவகாரங்களை உள்துறை அமைச்சகம் சார்பில் கையாண்டு வந்தவர் ஞானேஷ்குமார்தான்.
ராமர் கோவில் கட்டுவதில் ஞானேஷ்குமாரின் ரோல்
இந்த நிலையில் 2019 நவம்பர் 9 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு டிரஸ்ட் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது. அந்த டிரஸ்டிடம்தான் ராமர் கோவில் கட்டும் நிலம் ஒப்படைக்கப்படும், தகுதியானவர்களை டிரஸ்டிகளாக நியமித்து கோவில் கட்டுமான பணிகளை முழுக்க முழுக்க அந்த டிரஸ்டேதான் கவனிக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது காஷ்மீர் 370 ரத்துக்கு அடுத்து, பாஜகவின் இரண்டாவது கனவுத் திட்டம்.

அந்த வகையில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான டிரஸ்ட் அமைக்கும் பணிகளை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று மோடியும், அமித் ஷாவும் ஆலோசித்தபோது அமித் ஷா கூறிய பெயர், ‘ஞானேஷ்குமார்’.
ஞானேஷ்குமாருக்காக அமித் ஷா போட்ட அரசாணை!
இதன் அடிப்படையில் 2020 ஜூன் 11 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் தனது இரு உட்பிரிவுகளை மறு சீரமைப்பு செய்து உத்தரவிட்டது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு 1, உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு 2 என பிரிவுகள் இருந்தன.
காஷ்மீர் விவகாரங்கள் பிரிவு 1 இல் இருந்தன. அயோத்தி விவகாரங்கள் பிரிவு 2 இல் கவனிக்கப்பட்டன. ஞானேஷ்குமார் காஷ்மீர் பிரிவை உள்ளடக்கிய பிரிவு 1 இன் தலைமை அதிகாரியாக இருந்த நிலையில், அயோத்தி விவகாரங்களை கையாண்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு-II, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு-I உடன் இணைக்கப்பட்டது. அதாவது அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான டிரஸ்ட் அமைக்கும் பணியை ஞானேஷ்குமாரிடம் ஒப்படைப்பதற்காக உள்துறையிலேயே மாற்றங்களை செய்து அரசாணை பிறப்பித்தார் அமித் ஷா
அமித் ஷாவின் ஆலோசனைப்படி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்குவது முதல் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவரை செயலாற்றினார் ஞானேஷ்குமார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இவர் கையில்தான்!
இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் இரு கனவுத் திட்டங்களான ஜம்மு காஷ்மீர் 370 ரத்து, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் என இரண்டையும் நிறைவேற்றுவதில் உறுதுணையாக செயல்பட்ட ஞானேஷ்குமார்தான், இப்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளர்.
இவரது தலைமையின் கீழ்தான் இந்த ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர்தல், 2026 இல் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.