கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சீட்டா புலிகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ‘ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சீட்டா புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம் நமீபியாவைச் சேர்ந்த 8 சீட்டா புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இந்த சீட்டா புலிகளை மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் நேற்று (செப்டம்பர் 17 ) திறந்து விட்டார்.

சீட்டா புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டு பேசிய பிரதமர் மோடி , “1952 ஆம் ஆண்டு சீட்டா புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றை திரும்பக் கொண்டுவருவதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை” என்று கூறினார்.

மோடியின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்பியும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
சீட்டா புலி ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “சீட்டா புலி திட்டம் 2008 – 2009 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு, மன்மோகன் சிங் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டதிற்கு தடை விதித்தது. பின்பு 2020 ஆம் ஆண்டு மீண்டும் அனுமதி வழங்கியது” என்றும் “கடந்த ஆட்சியின் தொடர் நிகழ்வுகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
பிரதமரால் குனோ தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட ’தமாஷ் நிகழ்வு’ தேசிய பிரச்சினைகள் மற்றும் பாரத் ஜோடா யாத்திரையில் இருந்து கவனத்தை திசைத்திருப்பும் முயற்சியே” என்று கூறியுள்ளார்.
மேலும் “எங்களுடைய புலி (ராகுல் காந்தி) பாரத் ஜோடோ யாத்திரைக்குச் சென்றுள்ளதால், அவர்கள் வெளிநாட்டிலிருந்து சீட்டா புலியை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ‘ கர்ஜனைக்காக அனைவரும் காத்திருந்தனர்…ஆனால் அந்த புலி பூனையை போல் உறுமியது’ என்று கிண்டல் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உணவு தட்டில் கை கழுவிய முதல்வர்: அதிமுக பதிலடி!