நிதி நிறுவன மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இன்று (ஆகஸ்ட் 28) சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் பண்ட் லிமிடட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து ரூ.525 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன், மகிமைநாதன் ஆகிய மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதலீட்டாளர்களுக்கு பணத்தை தான் வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் தேவநாதன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இந்த நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, காவல்துறை தரப்பில், “இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஒருவர் தலைமறைவாக உள்ளார். இதுவரைக்கும் 800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் உள்ளிட்ட மூன்று பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை இன்று நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘வாழை’… வீடு தேடிச்சென்ற திருமா… விமர்சிக்கும் கிருஷ்ணசாமி
வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!