Exclusive: கொலை வழக்கில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் – நெருக்கடியில் திமுக எம்.பி. ரமேஷ்

Published On:

| By Aara

கடலூர் திமுக மக்களவை உறுப்பினரான ரமேஷ் கடந்த வருடம், ஒரு கொலை வழக்கில் சிக்கி கைதானதை அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் மறந்திருக்க முடியாது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் முந்திரி தோப்புகள் நிறைந்த பணிக்கன்குப்பம் கிராமத்தில் திமுக எம்.பி.யான  டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி ஸ்ரீ காயத்திரி முந்திரி கம்பெனி உள்ளது. அதில் வேலை செய்துவந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மலைகனி என்ற கோவிந்தராஜ் என்பவர்  மர்ம மரணம் அடைந்தார். இந்த விவகாரம் எம்பி ரமேஷ் கைதாகும் அளவுக்கு அவருக்கு பெரும் பிரச்சினையானது.

 2021 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, மாலை 6.15 மணிக்கு முந்திரிகளை திருடிவிட்டதாக கோவிந்தராஜை கூப்பிட்டு  விசாரணை செய்திருக்கிறார் உரிமையாளரான எம்.பி. ரமேஷ். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்துவரும் அல்லாபிச்சை, கந்தவேல், கந்தராஜ், வினோத், நடராஜன் ஆகியோர் சேர்ந்து கோவிந்தராஜை  கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அதன் பிறகு கோவிந்தராஜை ரத்த காயத்துடன் TN22 AR 7337 அம்பாசிட்டர் காரில் அழைத்துக் கொண்டு காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு இரவு பத்து மணிக்குச் சென்றுள்ளனர். கோவிந்தராஜ் கம்பெனியில் இருந்து திருடியதாகப் புகார் கொடுத்துள்ளனர். அப்போது இரவு பணியிலிருந்த  காவலர்  பாஸ்கர் (1312) விசாரணை  செய்தார். எம்பியும் அவரது ஆதரவாளர்களும் அடித்ததாகச் சொல்லப்பட்டதும், ரத்த காயத்துடன் இருந்த கோவிந்தராஜை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

நடராஜன், வினோத், கந்தராஜ் ஆகியோர் அதே  அம்பாசிட்டர் காரில் கோவிந்தராஜை அழைத்துக்கொண்டு எம்பி ஆலோசனைப்படி மீண்டும் பணிக்கன்குப்பம் முந்திரி கம்பெனிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே கோபமான எம்பி ரமேஷ், நடராஜன், வினோத் உட்பட ஆறுபேர் சேர்ந்து மீண்டும் வேப்பந்தடி மற்றும் கட்டையால் தாக்கியதில் கோவிந்தராஜ் உடல்நிலை மோசமானது. அப்போது  கந்தவேல் எடுத்துவந்த மது பாட்டிலில், முந்திரிக்கு அடிக்கும்  நியுகம் என்ற பூச்சி மருந்தைக் கலந்து வலுக்கட்டாயமாக கோவிந்தராஜ் வாயில் ஊற்றியுள்ளார்கள்.  அவர் இறந்தபிறகு அதே அம்பாசிட்டர் காரில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர் இவர் இறந்துவிட்டார் என்று கோவிந்தராஜ் உடலை பிண அறையில் வைத்துவிட்டார்.

இவ்வளவு விவரங்களும்  சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் சுந்தராஜன் மற்றும் தீபா இருவரும் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. 

குற்றவாளிகள் ஏ1 டி.ஆர்.வி.எஸ். ரமேஷ், ஏ2 கந்தவேல், ஏ3 நடராஜன், ஏ4 அல்லாபிச்சை, ஏ5 வினோத், ஏ6 சுந்தராஜன் ஆகியோர்  யார் எப்படி அடித்தார்கள், விஷம் ஊற்றியது யார் என்ற விபரங்களைப் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தை மிகத் தெளிவான வரைபடம்,  செல்போன் டவர் லொக்கேஷன், கால் டீய்ட்டல்ஸ் எடுத்துக்கொடுத்த ஜியோ நோடல் ஆபிசர் சந்திரமௌலி, வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி உதவி ஆய்வாளர் பிரசன்னா, காடம்புலியூர் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான ஃபுட்டேஜ், எதிரிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்த காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ தாமரைப்பாண்டியன், சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் தீபா மற்றும் சுந்தராஜன் உட்பட 57 சாட்சிகள் அடங்கிய குற்றப் பத்திரிகை, எம்பி ரமேஷ் தரப்பை மிரளவைத்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்பி ரமேஷ் உட்பட ஆறு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள்.  

“வழக்கை முடிக்க சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளும் வேகமெடுத்துள்ளனர். அனைத்துவிதமான ஆதாரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர் விசாரணை அதிகாரிகள்.  அன்று மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் வெளியான புலனாய்வு செய்திகள்தான் சிபிசிஐடி போலீஸாரின் குற்றப் பத்திரிகையிலும்  இருந்துள்ளதை காணமுடிகிறது” என்கிறார்கள் கடலூர் வழக்கறிஞர்கள்.

திமுக எம்.பி. ரமேஷுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. 

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share