தமிழகத்தில் மாற்றம் நிகழும்: ஜெ.பி.நட்டா

அரசியல்

”வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் நிகழும்” என அகில இந்திய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, இரண்டு நாள் பயணமாக கோவைக்கு இன்று (டிசம்பர் 27) வருகை தந்தார். அவரை, விமான நிலையத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால், அதற்கான பிரசார களத்தைத் தற்போதே பாஜக தொடங்கிவிட்டது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தைத் தொடங்கினார்.

இன்று மாலை மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், “பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை எல்லோரும் உணரத் தொடங்கிவிட்டனர். எல்லாத் துறைகளிலும் ஏற்றுமதியில்கூட நாம் கணிசமான அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் நடப்பவர்கள் எல்லாம், ’தமிழ்நாடு தனி மாநிலமாக வேண்டும்’ என கோஷம் எழுப்புவர்கள். இன்று ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ராகுல் குடும்பத்தினர்தான் நாட்டில் பிரிவினைக்கான விதையை ஊன்றியவர்கள். தமிழகத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கவும் தாமரையை மலரச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருக்கும் வாரிசு அரசியலை நாம் மாற்ற வேண்டும்.

இங்கு, திமுக ஆட்சியில் இருக்கிறது. அவர்களுடைய முக்கிய நோக்கம் என்பது, தங்களுடைய குடும்பத்தைப் பாதுகாப்பது ஆகும். முதல் குடும்பம் என்றால், அவர்களுடைய குடும்பம் மட்டுமே. அதாவது, அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மற்ற உறவுகளைப் பற்றிகூட அவர்களுக்கு கவலையில்லை. இங்கே dmk என்பதற்கு நான் ஒரு விளக்கத்தைத் தருகிறேன்.

அதாவது d என்பது dynasty (வாரிசு அரசியல்). அடுத்து m என்பது money (பணம்). இவர்களுக்கு பணம் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. கடைசியாக k. k என்றால் தமிழிலேயே சொல்லலாம். அது, கட்ட பஞ்சாயத்து. ஆக, திமுக என்றாலே எல்லா இடங்களிலும் கட்ட பஞ்சாயத்துதான்.

அதுபோல், அவர்களுடைய நோக்கம் கொள்ளையடிப்பது மட்டும்தான். அவர்கள் மக்களுக்கான ஆட்சி செய்யவில்லை. தேசம் ஒரு பாதுகாப்பான கைகளில் இருப்பதைப் போன்று, தமிழகம் ஒரு பாதுகாப்பான கைகளில் இல்லை. அதனால்தான் நம் கட்சி தேசத்திற்காக சேவை செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடிப்பதற்காக சேவை செய்கிறார்கள்.

a

நாம் மக்களைப் பாதுகாப்பதற்காக சேவை செய்கிறோம். அதுபோல், அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை முதலில் இந்த நாடு. அடுத்துதான் கட்சி. அதிலும் சுயநலம் என்பது கடைசியில்தான். இதற்கு முற்றிலும் மாறுபட்டது திமுக. அங்கு சுயநலம்தான் முதலில் இருக்கும். அடுத்துதான் அவர்களுடைய கட்சி இருக்கும். அதற்கடுத்தே நாடு இருக்கும்.

ஆக, இந்த நாட்டுக்கு எந்த விதத்தில் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ, அதையெல்லாம் திமுகவினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் எல்லோரும் இணைந்து பாஜகவுக்கு உங்களுடைய ஆதரவைத் தர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி சட்டசபைத் தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

“ஆண்டிகள் சேர்ந்த மடம்” – ஓபிஎஸ், சசிகலா குறித்து விமர்சித்த ஜெயக்குமார்

தமிழருக்கு பணி நியமனம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0