ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் 5 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி, தனது மனைவியுடன் சம்பத்நகரில் இருக்கும் ஸ்ரீ அம்மன் மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “5 இடங்களில் வாக்குப்பதிவின் போது குறைபாடு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து சுமுகமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. வாக்காளர்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வெயிலின் தாக்கத்துக்காகத் தேவையான இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 77 வேட்பாளர்கள் உள்ளனர். அதற்கேற்ற வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பிரியா
மக்கள் மாற்றத்துக்காகக் கிளம்பி வர வேண்டும்: நாம் தமிழர் வேட்பாளர்!
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம்!