பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (செப்டம்பர் 18) கூடிய மத்திய அமைச்சரவை பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திராயன் -4
சந்திராயன்-3 திட்டம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில், நிலவில் தரையிறங்கி, நிலவு மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்பப் பூமிக்குத் திரும்புவதற்கான, ரூ.2104.06 கோடி நிதி தேவைப்படுகிற சந்திராயன்-4 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா 2035-இல் இந்திய விண்வெளி நிலையத்தை விண்வெளியில் நிறுத்தவும், 2040-இல் ஒரு இந்தியரை நிலவுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட சந்திராயன்-4 திட்டம் முக்கியம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ராபி பருவத்துக்கான உர மானியம்
இந்த வருடம் ராபி பருவத்திற்கான ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சகம் முன்வைத்த, ஊட்டச்சத்தின் அடிப்படையிலான பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானிய விலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.24,475.53 கோடி நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானிய விலை உரத் திட்டம் கடந்த 2010 இல் இருந்து நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 10.45 கோடி மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் இருப்பிடம், கல்வி, சுகாதாரம், போன்ற வசதிகள் போதுமான அளவிற்குக் கிடைப்பதில்லை.
இந்த வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தான் ரூ.79,156 கோடி செலவிலான ‘பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்’ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான ரூ.56,333 கோடி மத்திய அரசு வழங்கும் , மீதமுள்ள ரூ.22,823 கோடியை அந்தந்த மாநில அரசுகள் செலுத்தும்.
வீனஸ் ஆர்பிடர் மிஷன்
நமது பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் வெள்ளி(Venus) ஆகும். இந்த கோள் நாம் வசிக்கும் பூமி உருவானது மாதிரியே உருவானதாக நம்பப்படுகிறது. இதை ஆராய்வதற்காக 2028 மார்ச் மாதம் இந்திய அரசாங்கம் ‘வீனஸ் ஆர்பிடர் மிஷன்’(Venus Orbiter Mission) விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1236 கோடி நிதி தேவைப்படும் என்று இஸ்ரோ கணக்கிட்டுள்ளது.
நெக்ஸ்ட் ஜெனரேஷன் லாஞ்ச் வெஹிக்கிள்
2035-ஆம் ஆண்டு இந்திய அரசு இந்திய விண்வெளி நிலையத்தை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. மேலும், 2040-இல் நிலவுக்கு ஒரு இந்தியரை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த தலைமுறை ஏவுதல் வாகனத்தை (Next Generation Launch Vehicle) வடிவமைக்க மத்திய அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஏவுதல் வாகனத்தால் தற்போது பயன்படுத்தப்படும் ஏவுதல் வாகனங்களை விட 3 மடங்கு எடையுள்ள சுமைகளை விண்வெளிக்கு எடுத்துச்செல்ல முடியும். மேலும் இந்த அடுத்த தலைமுறை ஏவுதல் வாகனத்தைத் தயாரிப்பதற்கான செலவு, லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3 தயாரிக்க தேவையான செலவை விட அரை மடங்கு கூடுதல் செலவுதான் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த திட்டத்திற்கு ரூ.8240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
காரிலேயே அலைந்த காக்காத் தோப்பு பாலாஜி… அதிகாலை என்கவுன்ட்டர் யாருக்காக?
லெபனான் – தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜரில் குண்டு : அதிர்ச்சித் தகவல்!