ஒரு MLA-வுக்கு ரூ.50 கோடி : பேரம் பேசிய பாஜக…வீடியோ வெளியிட்ட KCR

அரசியல்

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பா.ஜ.க. பேரம் பேச முயற்சித்ததாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 103 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 26-ம் தேதி டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த அச்சம்பேட் எம்.எல்.ஏ. குவ்வல பால்ராஜ், தந்தூர் எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி,

கொல்லப்பூர் எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ரெட்டி, பினபாகா எம்.எல்.ஏ. ரேக காந்த ராவ் ஆகியோரிடம் பா.ஜ.க. சார்பில் சிலர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சைபராபாத் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ரெய்டு நடத்திய சைபராபாத் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரன் தலைமையிலான போலீசார், நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் பேரம் பேசப்பட்டதாகவும் பதவிகள் கொடுப்பதாக ஆசை காட்டியதாகவும் அப்போது காவல் ஆணையர் ஸ்டீபன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வினர் தான் பேரம் பேசியதாகக் கூறி டி.ஆர்.எஸ். கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதற்கு பா.ஜ.க. சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் பா.ஜ.க.வினருடன் இருக்கும் புகைப்படங்களை டி.ஆர்.எஸ். கட்சியினர் வெளியிட்டு அதிரடி காட்டினர்.

நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வினர் பேரம் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறி வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ராமச்சந்திர பாரதி என்பவர் கட்சி தாவும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 50 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக பேரம் பேசுவதும் எம்.எல்.ஏ.க்களை டெலிவரி என்று வார்த்தையால் குறிப்பிடுவதும் பதிவாகியுள்ளது.

மேலும், பா.ஜ.க.வில் பி.எல்.சந்தோஷ், ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகிய 3 பேர் தான் இந்த விஷயங்களைக் கையாள்வதாகவும் மாநில பா.ஜ.க. இதில் தலையிடாது என்றும் கூறுவதும் பதிவாகியுள்ளது.

அதே வீடியோவில் இது வரை 8 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக பா.ஜ.க.வினர் பேசுவது பதிவாகியுள்ளதாகவும் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் பிற மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இந்த ஆதாரத்தை அனுப்பிவைத்து பா.ஜ.க.வின் சதிச்செயலை காட்டப் போவதாக அவர் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்த குற்றச்செயல் அரங்கேறியுள்ளதாக சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

அப்துல் ராஃபிக்

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஜமேஷா முபின் குறித்து அவரது மனைவி சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *