ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ‘திறன் மேம்பாட்டு கழக ஊழல்’ தொடர்பாக அம்மாநில சிஐடி போலீஸார் இன்று (செப்டம்பர் 9) காலை 6 மணிக்கு கைது செய்திருக்கிறார்கள். இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட இருக்கிறார் என்று நள்ளிரவில் இருந்தே ஆந்திர தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. அவர் நந்தியால் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆர்.கே. மண்டபத்துக்கு நேற்று இரவே வந்திருந்தார். சந்திரபாபு கைது செய்யப்படலாம் என்று நள்ளிரவில் வந்த தகவலால் அந்த நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தை சுற்றி தெலுங்குதேச தொண்டர்கள் திரண்டனர்.
இந்நிலையில் ஆந்திர சிஐடி போலீசாரும், போலீசாரும் அதிகாலை அந்த மண்டபத்துக்கு சென்றனர். ‘திறன் மேம்பாட்டுக் கழக’ ஊழல் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை கைது செய்வதாக அவரிடம் தெரிவித்தனர். ‘என்னைக் கைது செய்வதற்காக என்ன முதல் கட்ட முகாந்திரம் உள்ளது?’ என்று சந்திரபாபு அவர்களிடம் கேள்வி கேட்டார். சில மணி நேரங்கள் இந்த வாக்குவாதம் தொடர்ந்தது. ‘எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இருக்கிறதா?’ என்று கேட்டார் சந்திரபாபு நாயுடு. ஆனால் சிஐடி போலீஸார் அதையெல்லாம் காட்டவில்லை. சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் பலமாக நடந்தது. ஆனால் கடைசியில் ’உங்களை கைது செய்ய அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறது என்று சொல்லி அவரை காலை 6 மணியளவில் கைது செய்தனர். அதாவது போலீசார் 50 (1) CrPC நோட்டீஸை சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்து அவரை கைது செய்தனர். அந்த நோட்டீஸில் மங்களகிரி டி.எஸ்.பி. தனஞ்செயுடு கையெழுத்திட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா அழைத்துச் சென்றிருக்கிறார்கள் போலீஸார்.
முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் கைது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்குதேசம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் மாநிலம் முழுதும் தெலுங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபயணத்தில் உள்ளார். அவர் அங்கிருந்து நகர்வதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதாவது நாளை காலை 6 மணிக்குள் மங்களகிரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால் அவர் இன்னமும் எந்த நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக் கிழமை நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து திங்கள் கிழமைதான் சந்திரபாபு நாயுடுவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்கள் சிஐடி போலீசார். அதுவரை சந்திரபாபு நாயுடுவை தங்கள் கஸ்டடியில் வைத்திருக்க திட்டமிடுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் தெலுங்குதேச வழக்கறிஞர்கள்.
நீதிமன்ற விடுமுறையை வைத்து போலீசார் சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோத காவலில் வைத்திருக்க முயற்சிப்பதாக தெலுங்குதேச வழக்கறிஞர்கள் கூறி அதைத் தடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு கைதுக்கு காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மற்றும் பல கட்சிகள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இந்தியா கூட்டணிக்கான அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் சந்திரபாபு நாயுடு பக்கம் நிற்கிறோம். சர்வாதிகாரத்துக்கு எதிரான புரட்சி செய்ய சரியான நேரம் இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–வேந்தன்
”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!
தொகுதி வாரியாக நியமனம்: விஜய் மக்கள் இயக்க மகளிரணி கூட்டத்தில் முடிவு!