முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு : ரஜினி, ஓபிஎஸிடம் கைகுலுக்கி உற்சாகமாக பேசிய மோடி

Published On:

| By indhu

ஆந்திர முதல்வராக 4வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. ஆனால், ஆந்திராவில் முன்பு ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 11) ஆந்திராவில் வெற்றி பெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றதால், ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 12) விஜயவாடா அருகே உள்ள சேகர பள்ளியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 4வது முறையாக ஆந்திர  முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவரை தொடர்ந்து, நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, அனுபிரியா பட்டேல், சிராக் பஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்னாத் ஷின்டே, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணா ஆகியோரும்  பங்கேற்றனர்.

விழா மேடையில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரது கையை பிடித்து உயர்த்தி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, ரஜினிகாந்த்,  லதா ரஜினிகாந்த் ஆகியோரிடம் சென்று கைகுலுக்கி பேசினார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ஓபிஎஸை பார்த்த மோடி அவர் அருகிலும் சென்று கைகுலுக்கி பேசினார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ்மீட்” : தமிழிசையை கட்டுப்படுத்தும் அண்ணாமலை?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel