குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் உள்ள வேட்பாளர்களுக்கே ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான நரவரிப்பல்லேயில் மகர சங்கராந்தி விழாவை சந்திரபாபு நாயுடு சிறப்பாக கொண்டாடினார். அப்போது, ஆந்திராவில் மக்கள் தொகையை அதிகப்படுத்துவதற்காக தான் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து ஊடக நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியபோது, “சில ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள நபர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில் ஒரு விதிமுறையை அரசு கொண்டு வந்தது.
தற்போதைய சூழ்நிலையில், அந்த விதிமுறையை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மக்கள்தொகை குறைந்து வருவதன் ஆபத்துகளை உணரவில்லை. அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தின.
அதனால் இன்று, அந்த நாடுகள் நம் நாட்டு மக்களை சார்ந்து இருக்கின்றன. பலர் இங்கிருந்து அந்த நாடுகளுக்கு செல்கின்றனர். அதே தவறை நாம் செய்யக்கூடாது.
2047 வரை இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் இருப்பார்கள். 2047 க்குப் பிறகு, வயதானவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஒரு பெண்ணுக்கு இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் பிறந்தால், மக்கள் தொகை குறையும். ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தால், மக்கள் தொகை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் போட்ட தடை… உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு… இன்று விசாரணை!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!