தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று இரண்டாவது முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அதேபோல் ஆந்திர அரசியலின் மற்றொரு முக்கியப் புள்ளியான ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணும் அமித்ஷாவை இன்று சந்தித்திருக்கிறார். இது ஆந்திர அரசியலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டு பெரிய மாநில கட்சிகளுமே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியை அறிவிக்காமல் இருந்து வந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இரண்டு கூட்டணிகளிலுமே பெரிதாக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தன.
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களும் நடைபெற உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சியும், ஜன சேனா கட்சியும் இணைந்து தேர்தல்களை சந்திக்க உள்ளதாக கூட்டணியை அறிவித்தனர்.
ஜன சேனா கட்சிக்கு மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 24 சட்டமன்ற தொகுதிகளும், மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 3 மக்களவை தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்றத் தேர்தலுக்கு 94 பெயர்களை உள்ளடக்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 7 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். மூன்று நாளாக இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். இன்று இரண்டாவது முறையாக அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருப்பதாகவும், அதனை உறுதி செய்யும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவுமில்லை, அதனால் தென் மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் தற்போது தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ஆந்திர அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
– விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கைது!
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு!