புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சரான சந்திர பிரியங்காவின் ராஜினாமா, புதுச்சேரி அரசியலில் மட்டுமல்ல டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய புதுச்சேரி முதலமைச்சரான ரங்கசாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் தான் சந்திர பிரியங்கா. புதுச்சேரியில் காரைக்கால் நெடுங்காடு ரிசர்வ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். தன் நண்பரின் மகள் என்ற முன்னுரிமையில் அமைச்சராக்கினார் ரங்கசாமி. அதுமட்டுமல்ல, அடிக்கடி பிரியங்காவிடம், ‘நீ என் மக மாதிரி’ என்றும் கண்டிப்பும் கனிவும் கலந்து சொல்லக்கூடியவர் ரங்கசாமி.
இந்த நிலையில் சாதி தாக்குதல், பாலின ரீதியில் தாக்குதல் போன்ற மிக அதிர்ச்சி தரத் தக்க காரணங்களைச் சொல்லி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் அனுப்பியிருக்கிறார் சந்திர பிரியங்கா. இதன் அடுத்த கட்டமாக அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திர பிரியங்காவின் ராஜினாமாவுக்கு முன்னும் பின்னும் நடக்கும் விஷயங்கள் புதுச்சேரி அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சர் என்று அழைக்கப்பட்டாலும் சந்திர பிரியங்காவிடம் மேலும் சில முக்கிய துறைகளும் கொடுக்கப்பட்டன. ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதித்துறை, தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்பு, கலை-பண்பாட்டுத் துறை, பொருளாதாரம் புள்ளியியல் துறை ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார் சந்திரபிரியங்கா.
பொறியியல் பட்டதாரியான சந்திர பிரியங்கா குறும்படங்களிலும் நடித்துள்ளார். திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் நீண்ட நாள் தோழியும் கூட. மழையில் டான்ஸ் ஆடி வீடியோ போடுவது, தனது கைப்பையை திறந்து அதில் உள்ள பொருட்கள் என்னென்ன என்று யுட்யூப் சேனல்களுக்கு வ்லாக் செய்வது என்றும் சமூகத்தில் கவனிக்கப்படக்கூடிய ஆளுமையாக திகழ்பவர் சந்திரபிரியங்கா.
முதல்வர் ரங்கசாமி தன் மகளைப் போல நினைத்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது ஏன்?
புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். “தன் நண்பர் சந்திரகாசுவின் மகள் என்பதால் தான் சந்திர பிரியங்காவுக்கு முக்கியத்துவம் அளித்தார் ரங்கசாமி. ஆனால் சமீப நாட்களாக முதலமைச்சர் ரங்கசாமிக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா பற்றி சென்ற தகவல்கள் அவருக்கு அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.
ஒரு கல்லூரி அதிபரோடு நட்பு பாராட்டிய சந்திர பிரியங்கா அவர் மூலமாக பாஜக புள்ளிகளுடன் மிக நெருக்கமாக பழகினார். தான் சார்ந்த என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளை விட துணை நிலை ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவின் புதுச்சேரி மாநில புள்ளிகள் ஆகியோரிடம் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது.
சமீபத்தில் நாகப்பட்டினம் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனை வரவேற்று அவரோடு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் சந்திர பிரியங்கா. கூட்டணிக் கட்சி என்ற முறையில் இது வெளியே பார்க்கப்பட்டாலும் பாஜகவோடு மிகவும் நெருக்கமாகி விட்டார் சந்திர பிரியங்கா என்றே முதல்வருக்கு தகவல்கள் கிடைத்தன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சந்திர பிரியங்கா மேற்கொண்ட இலங்கைப் பயணம் பற்றி முதலமைச்சர் ரங்கசாமிக்கு சில தகவல்கள் சென்று அவரை அதிர வைத்திருக்கின்றன.
சந்திர பிரியங்கா வகிக்கும் கலை பண்பாட்டுத் துறையின் செயலாளராக இருப்பவர் நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ். இவர் டெல்லியில் மத்திய அரசுப் பணியில் இருந்தார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மூலமாக புதுச்சேரி பணிக்கு வருகிறார்.
இவர் துறை அமைச்சர் பிரியங்காவுடன் சேர்ந்து முதலமைச்சர் ரங்கசாமிக்குத் தெரியாமலேயே சில பணிகளை செய்து முடித்ததாக முதல்வருக்கு தகவல் செல்கிறது.
இதுகுறித்து துறைச் செயலாளர் நெடுஞ்செழியனை அழைத்து விசாரித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. ‘நான் அமைச்சர் சொல்லிதான் செய்தேன்’ என்று சொல்லியிருக்கிறார் செயலாளர். இதையடுத்து அமைச்சர் சந்திர பிரியங்காவையும் அழைத்து விசாரித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது அமைச்சர் அளித்த பதில் முதலமைச்சருக்கு திருப்திகரமாக இல்லை.
இந்த நிலையில் அக்டோபர் 8 ஆம் தேதி சந்திர பிரியங்காவிடம் சற்று எச்சரிக்கை தொனியிலேயே பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “நீ படிச்ச பொண்ணு. நாலு மொழிகள் தெரிஞ்ச பொண்ணு. நிர்வாகம் நல்லா நடக்கும்னு உனக்கு சான்ஸ் கொடுத்தேன். ஆனால் உன்னைப் பத்தி எனக்கு வர்ற தகவல்கள் எல்லாம் நல்லா இல்லை. நீ உன் அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சு லட்டர் எழுதிக் கொடு’ என்று கேட்க அதிர்ந்து போகிறார் சந்திர பிரியங்கா.
‘எனக்கு அவகாசம் கொடுங்க’ என்று கேட்டுவிட்டு வெளியே சென்ற பிரியங்கா தனக்கு நெருக்கமான பாஜக முக்கியப் புள்ளிகளோடும், அந்த கல்லூரி அதிபரோடும் ஆலோசனை நடத்துகிறார். இதையும் அறிந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி இனியும் காத்திருக்க முடியாது என்று, அமைச்சர் சந்திர பிரியங்காவை பதவியில் இருந்து நீக்கம் செய்து துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்புகிறார்.
ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் இருந்தே இந்த தகவல் சந்திர பிரியங்காவுக்கு போக, ‘நாம் நீக்கப்படுவதை விட நாமே ராஜினாமா செய்துவிடலாம்’ என்று முடிவுக்கு வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார். அந்த கடிதத்தில், தனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டுள்ளது, சாதி ரீதியாக, பாலின ரீதியாக தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன் என்றெல்லாம் புகார்களை அடுக்கியுள்ளார்.
விரைவில் சந்திர பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் திருப்பங்கள் நடைபெற இருப்பதாக கூறுகிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தினர், தனிப்பட்ட பயணமாக விரைவில் திருப்பதி செல்ல இருக்கிறார் சந்திர பிரியங்கா. அதைத் தொடர்ந்து அவரது அரசியல் பயணமும் பாஜகவை நோக்கியதாக இருக்கும், இதன் மூலம் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஒரு செக் வைப்பதாக இருக்கும்” என்கிறார்கள்.
-வணங்காமுடி
அத்திக்கடவு – அவினாசி திட்டம் எப்போது துவக்கம்? – துரைமுருகன் பதில்!
மிஷ்கின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்
இந்த செய்தியின் ஆசிரியரையும், செய்தி எழுதியவரையும் பாராட்டுகிறேன்… அருமையான எழுத்து கோர்வைகள். வார்த்தைகள் நிதானமாக பயன்படுத்தியுள்ளனர்…
மின்னம்பலத்திற்கு வாழ்த்துக்கள்…