Challenges facing Singapore tharman

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் : உறுதியளித்த தர்மன் சண்முகரத்னம்

அரசியல் இந்தியா

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூப்பின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 22ஆம் தேதி பெறப்பட்டது.

இந்த தேர்தலில் ஹலிமா யாக்கூப் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இந்தநிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான, சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்ற, தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

நாட்டின் 9ஆவது அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று நடைபெற்ற தேர்தலில், சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களித்தனர். இந்த  தேர்தலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் என வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களும் வாக்களித்தனர்.

அதன்படி, 70.4 சதவிகித வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழரான தர்மன் சண்முகரத்னம்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காச்சோங்15.72 சதவிகித வாக்குகளும், டான்கின் லியான் 13.88 சதவிகித வாக்குகளும் பெற்று தோல்வியுற்றனர்.

இந்த தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரி டான் மெங்க் அறிவித்தார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கூப்பிடம் இருந்து பொறுப்பை பெறுகிறார் தர்மன் சண்முகரத்னம் .

தர்மன் சண்முகரத்னம் பற்றி… 

1.2011-2019 வரை சிங்கப்பூரின் துணை பிரதமர்

2.2003 – 2008  வரை கல்வி அமைச்சராகவும், 2007 – 2015 வரை  நிதி அமைச்சராகவும், 2011 – 2012 வரை மனித வள துறை அமைச்சராகவும், 2015 – 2023 வரை சமூக கொள்கைக்கான ஒருங்கிணைப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

3. 2001 பொதுத் தேர்தலில் இருந்து அரசியலிலிருந்து வரும் தர்மன் சண்முகரத்னம் 2006, 2011, 2015 மற்றும் 2020 இல் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. அடிப்படையில் இவர் ஒரு பொருளாதார நிபுணர்.

5. பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில் மற்றும் பேனல்களுக்கும் தலைமை தாங்கியிருக்கிறார்.

6. 2011 – 2014 வரை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கை ஆலோசனைக் குழுவான சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இருந்தார்.

7. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வொல்ப்சன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம்பெற்றார்.

8. “அனைவருக்கு மரியாதை” என்ற முழக்கத்துடன் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

9. புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய, ‘மருத்துவ விஞ்ஞானி’, ‘”சிங்கப்பூரின் நோயியல் தந்தை’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் கே. சண்முகரத்தினத்தின் மகன் ஆவார்.

10.தர்மன், சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்னம்,  “எனக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” ஆகும். சிங்கப்பூர் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவேன். இனம், மதம் இன்றி அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கான அதிபராக இருப்பேன்.

நாட்டை ஒருங்கிணைக்க கடுமையாக உழைப்பேன், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட எஸ்.ஆர். நாதன் என்ற செல்லப்பன் ராமநாதன், 2009ம் ஆண்டு அதிபராக தேர்வானார். அவரைத் தொடர்ந்து தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோன்று மலையாள வம்சாவளியைச் சேர்ந்த தேவன் நாயர் சிங்கப்பூர் அதிபராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

“தர்மன் சண்முகரத்தினத்தின் தமிழ் பாரம்பரியம், ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது. அவரது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

பிரியா

தபால் துறையுடன் இணையும் போக்குவரத்து துறை: வீட்டிற்கே வரும் ஆவணங்கள்!

விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1: இஸ்ரோவின் டார்கெட் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *