தமிழகத்தின் கோரிக்கையை மத்தியில் ஆள்பவர்கள் பிச்சை என்கிறார்கள் என்று நெல்லை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கூறினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு வந்தார்.
தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு சென்றார்.
அங்கிருந்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் திடலுக்கு கார் மூலம் சென்றார்.
நெல்லை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், காங்கிரஸ் கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார்.
பெரியாரின் சமூக நீதியும், மோடியின் வெறுப்பும்
பின்னர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “நான் உண்மையில் தமிழ்நாட்டிற்கு வருவதை நேசிக்கிறேன். காரணம் நான் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு எல்லாம் என்னை ஈர்த்தவை.
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டைப் பார்க்கிறேன்.
கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, கவிஞர்கள், அவர்களுடைய சிந்தனையின் தாக்கம்… இவையெல்லாம் நான் தமிழ் மொழியை படிக்கவில்லை என்றாலும் கூட, அவர்களது சரித்திரத்தை படித்த காரணத்தினால் இந்தியாவை பிரதிபலிக்கிற கண்ணாடியாக தமிழ்நாட்டை பார்க்கிறேன்.
பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் என பல தலைவர்களை தமிழ்நாட்டு மக்களான நீங்கள் இந்த மண்ணுக்கு தந்திருக்கிறீர்கள். இந்த கூட்டம் முடியும் வரை, இந்த தலைவர்களை பற்றி என்னால் பேசிக்கொண்டே இருக்க முடியும்.
சமூகநீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை தமிழ்நாட்டு மக்கள் இந்த நாட்டுக்கே காட்டியிருக்கிறீர்கள். அதனால் தான் பாரத் ஜோடா யாத்திரையை நான் இங்கிருந்து தொடங்கினேன்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிமீ தூரம் இந்த தத்துவங்களை சொல்வதற்காக நடந்தேன்.
எப்போதெல்லாம், இந்த மண்ணுக்கு வருகிறேனோ அப்போதெல்லாம் உங்களது கலாச்சாரம் முன்பும், பண்பாட்டின் முன்பும் தலைவணங்கிதான் வருகிறேன். காரணம், இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் இருந்துதான் எல்லோரும் நிறைய செய்திகளையும் பண்பாட்டுத் தரவுகளையும் படிக்க முடியும்.
அதேநேரம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் என் மீதும் என் குடும்பம் மீதும் அன்பை பொழிந்திருக்கிறார்கள். இந்த அன்பை வேறு எங்கும் பார்த்ததில்லை.
இது அரசியல் சார்ந்த உறவு அல்ல, அது ஒரு குடும்ப உறவு. இது மிகவும் அருமையான உறவு. இது எப்போதும் அரசியல் உறவாக இருக்காது.
தமிழ்நாடு விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய போது, அவர்களது வலியை என்னுடைய வலி போல உணர்ந்தேன்.
இன்று இந்தியாவில் தத்துவ போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெரியார் போன்றவர்கள் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை… மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம், மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும் துவேசமும் இருக்கிறது.
பிரதமர் மோடி, ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்று சொல்கிறார். இந்தியாவில் உள்ள எந்த மொழியை விடவும் தமிழ் மொழி எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.
இந்தியாவில் பல்வேறு மொழி, கலாச்சாரம் உள்ளது. அது எல்லாம் எங்களுக்கு முக்கியானது.
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒவ்வொருவரும் தங்களை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்கிற வாழ்க்கை முறை.
தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.
நம்மை பொறுத்தவரை எல்லா கலாச்சாரங்களும், பண்பாடும் புனிதமானதாக கருதுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
இதன் விளைவு என்னவென்றால், 83 சதவிகித இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். பிரிட்டிஷார் இருந்த காலக்கட்டத்தை காட்டிலும் இப்போது இருக்கிற இந்தியா சமச்சீர் அற்ற நிலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “21 பணக்காரர்கள் 70 விழுக்காடு செல்வத்தை தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் இவர்களது கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை.
பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்.
2,3 விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்கள் மட்டுமே, அத்தனை அரசு ஒப்பந்தங்களையும், வசதிகளையும் அனுபவித்து வருகிறார்கள்.
அதானி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக இருப்பதால் இந்த நாட்டின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் தயாரிக்கும் சோலார் பவர், கோல் பவர் என அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி காரணமாக சிறுகுறு நடுத்தர தொழில்கள் சீரழிந்து போயிருக்கிறது.
இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும், முகமைகளும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்களால் நிரப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை எல்லாம் மத்திய அரசின் கையால் எதிர்க்கட்சியினரை அழிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்துப்படுகின்றன. தேர்தல் ஆணையரை பிரதமர் மோடிதான் தேர்ந்தெடுக்கிறார்.
தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இவை அனைத்தும், இந்த நாட்டின் அனைத்து துறைகளும், இயற்கை வளங்களும் 2,3 பெரு முதலாளிகளுக்கு வசதி, வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
தமிழ்நாடு வெள்ள நிவாரணம் கேட்டால், அது மறுக்கப்படுகிறது. நிவாரணம் கேட்கும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதோடு, அது பிச்சை என்று மத்தியில் இருப்பவர்களால் முத்திரை குத்தப்படுகிறது.
தமிழகத்தை சார்ந்த மீனவர்கள் உதவி கேட்ட போது மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடினார்கள், ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.
மோடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவோம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்.
இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று உலக நாடுகள் போற்றிய நாட்கள் போய், ஜனநாயகம் அழிந்துபோகும் ஒரு நாடாக பார்க்கக் கூடிய சூழல் இருக்கிறது.
ராகுலின் வாக்குறுதிகள்…
பிரதமர் மோடி நாட்டின் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளியிருக்கும் நிலையில், அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் வேலைவாய்ப்பை கொடுக்க விரும்புகிறோம்.
அந்தவகையில் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வேலை கிடைப்பதற்கு முன்பு இளைஞர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். அதற்காக உதவித் தொகையும் வழங்கப்படும்.
டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்காக, வேலை கொடுக்கும் வகையில் தனியாக ஒரு சட்டம் இயற்றி, ‘வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம்’ நிறைவேற்றப்படும்” என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு பேசினார்.
நீட் தேர்வு குறித்து பேசிய அவர், “இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளின் முடிவுகளுக்கு விட்டுவிடுவோம்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க சட்டம் இயற்றப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தியாவில் உள்ள ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக, ஏழை குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்து அவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
அரசு வேலையில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
மோடி போன்று 10 ஆண்டுகள் காத்திருக்காமல் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம்.
ஆஷா பணிப்பெண்களுக்கும் அங்கன்வாடி பணிப்பெண்களுக்குமான ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.
மீனவர்களுக்கு டீசல் மானியம், படகுகளுக்கு காப்பீடு, கிரெடிட் கார்டு ஆகியவை வழங்கப்படும்” என்றார்
இறுதியாக, “நானும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டுடன் என்றும் இருப்போம். இந்த தேர்தல் ஜனநாயகத்தை, அரசியல்சாசனத்தை காப்பற்றுவதற்கான தேர்தல்” என கூறி உரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Video: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!
Mayank Yadav: வந்த ‘திடீர்’ சிக்கல்… என்ன செய்யப்போகிறது லக்னோ?