பெங்களூரு குண்டு வெடிப்பு… தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ஷோபா

Published On:

| By Selvam

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில், தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 3) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷோபா மீது நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் அதனை ஏற்க தயார்” என்று தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்திருந்தார்.

ஷோபா தரப்பில், “செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே எனது எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டுவிட்டேன்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஷோபா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  “தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் நன்மதிப்பும் உண்டு.

எனது கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் -5-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும் உதவும்” – சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி!

நிதி மோசடி வழக்கு… தேவநாதனுக்கு செப்டம்பர் 17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share