“கட்டளையிடும் அளவுக்கு ஒன்றிய அரசின் அறிவுரை தேவையில்லை” என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (செப்டம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் விலைவாசி உயரவு, பண வீக்கம் பற்றி சில விளக்கங்களை அளித்தார்.
”கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மிகப்பெரிய சந்தைகளில் பணம் இருந்தும், உற்பத்தியைக் கொடுக்க முடியவில்லை. இதனால் பணவீக்கமும் வர ஆரம்பித்தது. இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் ரிசர்வ் வங்கி இருக்கின்றது.
இதற்காக தமிழகத்திற்கும் ஒன்றிய அரசிடமிருந்து ஆலோசனை வழங்கப்பட்டது. ’பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தால், உங்களுடைய பணவீக்கமும் குறையும்’ என அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
இதுபோக, ‘இந்த ஆண்டு கடன் எடுக்கும் சக்தி இவ்வளவுதான்’ என ஒன்றிய அரசு ஒவ்வொரு வருடமும் மாநில அரசுக்கு கடிதம் எழுதி கட்டளையிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த சட்டமும் இல்லை.
ஆனால், அவர்கள் சட்டத் திருத்தம் செய்து கடன் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மாநில அரசுகளுக்கு கடிதத்தை எழுதி அதற்கான தொகையை தெரிவிக்கிறார்கள்.
ஆக, எவ்வளவு கடன் எடுக்க வேண்டும் என்பதையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். அதேநேரத்தில் எப்படி சம்பாதிக்கணும், சம்பாதிக்கக்கூடாது என்பதையும் சொல்கிறார்கள்.
அதாவது, மாநில திட்டங்களை ஒன்றிய அரசு சொல்வதுபோல்தான் நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
தேவைக்கு ஏற்ப நிதியைச் செலவு செய்து மக்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். அதேசமயம் அரசாங்க நிதியையும் மிகவும் பாதிக்க விடாமல் காக்க வேண்டும்.
அப்படி, பாதிப்பு ஏற்பட்டால் நாம் டெல்லியில் சட்டியை வைத்துக்கொண்டு, ‘கொஞ்சம் கூடுதலாய் நிதி கொடுங்க’ எனக் கேட்க வேண்டும். ஆனால், எங்களுக்கு சுய மரியாதை இருக்கிறது.
ஆகையால் இருக்கும் திட்டத்திலேயே நாங்கள் செயல்பட்டுக்கொள்கிறோம். அதனால், நீங்கள் எதை உயர்த்த வேண்டும், கட் செய்ய வேண்டும் எனச் சொல்லாதீர்கள். சட்ட அமைப்பு படி என்ன உரிமை இருக்கிறதோ, அதை மட்டும் சொல்லுங்கள். அதை நாங்கள் பின்பற்றுகிறோம். பாசத்தாலோ அல்லது செயல்திறன் அடிப்படையிலோ வேண்டுமானால் அறிவுரை சொல்லுங்கள்.
ஆனால் கட்டளை இடும் அளவுக்கு உங்களது அறிவுரை தேவையுமில்லை. பயனுமில்லை” என்றார் நிதியமைச்சர் பிடிஆர்.
ஜெ.பிரகாஷ்
பாஜக தலைவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் விதித்த நிபந்தனை!