மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டதை முழுமையாக கைவிட வேண்டும் என்று மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
டஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், விசிக தலைவர் திருமாவளவன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.
மத்திய அரசு விளக்கம்!
இந்தநிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் நேற்று (டிசம்பர் 24) தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது.
அந்த நேரத்தில் டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பின்னர், சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு – ஒழுங்குமுறை) சட்டம், 1957 என்பது 17.08.2023 முதல் சுரங்கங்கள் – கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 என்பதன் மூலம் திருத்தப்பட்டது.
இந்த திருத்தச் சட்டமானது ‘முக்கியமான கனிமங்கள்’ தொடர்பான சுரங்க குத்தகைகளையும், கூட்டு உரிமங்களையும் பிரத்தியேகமாக ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது. டங்ஸ்டன் அத்தகைய முக்கியமான கனிமங்களில் ஒன்றாகும்.

இந்த திருத்தத்தின் அடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட தமிழ்நாட்டின் முக்கிய கனிம தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து மாநில அரசுக்கு சுரங்க அமைச்சகம் 15.09.2023 அன்று கடிதம் எழுதியது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பதில்!
இதற்குப் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் 03.10.2023 தேதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கியதுடன், முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் என்று கோரினார்.
2021-2023-ம் ஆண்டில் முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் அரசுக்கு இருந்தபோது, தமிழ்நாடு எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், ஏல நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கனிமத் தொகுதி கூட ஏலம் விடப்படவில்லை.
நிலத்தின் சட்டத்தின்படி மத்திய அரசு முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அமைச்சருக்கு பதிலளிக்கப்பட்டது.
பின்னர், சுரங்க அமைச்சகத்தின் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு 2023 டிசம்பர் 6 அன்று, கடிதத்தின் மூலம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்படவுள்ள மூன்று முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களைக் கோரினார்.

தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர், 8.02.2024 தேதியிட்ட கடிதத்தில், நாயக்கர்பட்டி தொகுதி உட்பட இந்த மூன்று பகுதிகள் குறித்த விவரங்களை அளித்துள்ளார்.
இருப்பினும், 193.215 ஹெக்டேர் பரப்பளவில் (கனிமத் தொகுதியின் மொத்த பரப்பளவில் சுமார் 10%) பல்லுயிர் தளம் இருப்பதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பரிந்துரைக்கவில்லை.
மாநில அரசிடமிருந்து எதிர்ப்பில்லை!
சுரங்க அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 24 தொகுதிகளின் ஏலத்தை இதுவரை நான்கு கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி, 2024 பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
2024 ஜூன் மாதத்தில் இரண்டாவது முயற்சியாக மீண்டும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது. இது 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
2024 பிப்ரவரியில் இந்த கனிமத் தொகுதி ஆரம்பத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டதில் இருந்து 2024 நவம்பர் 7 அன்று ஏல முடிவு அறிவிக்கப்படும் வரை, 2024 பிப்ரவரி முதல் 2024 நவம்பர் வரை சுரங்க அமைச்சகத்தின் பல ஏலம் தொடர்பான கூட்டங்களில் தமிழ்நாடு கலந்து கொண்ட போதிலும், ஏலம் குறித்து எந்தவொரு எதிர்ப்பும் கவலையும் குறித்து மாநில அரசிடமிருந்து வரவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நலன் கருதி, முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதோடு நின்று விடுவது மட்டுமே சுரங்க அமைச்சகத்தின் பணியாகும். அதன்பிறகு, விருப்பக் கடிதம் வழங்குதல், கூட்டு உரிமம், சுரங்கக் குத்தகை ஆகியவை மாநில அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
தேவைப்பட்டால், கூட்டு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை கையெழுத்திடுவதற்கு முன்பு பகுதியை மாற்றியமைக்கலாம். உற்பத்தி தொடங்கியவுடன், அனைத்து வருவாயும் மாநில அரசுக்குச் சேரும்.
இருப்பினும், இந்த வட்டத்திற்கு விருப்பமான ஏலதாரர் அறிவிக்கப்பட்ட பிறகு, வட்டாரப் பகுதிக்குள் ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளம் இருப்பதைக் காரணம் காட்டி இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பல முறையீடுகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, கனிமத் தொகுதியை மறு ஆய்வு செய்து, பல்லுயிர் பெருக்க தளப் பகுதியை தொகுதியிலிருந்து விலக்கி தொகுதி எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு புவியியல் குறிப்பாணை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் ஒப்பந்தப்புள்ளி கோருவோருக்கு விருப்ப ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை வரவேற்பு!
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
“மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் மோடி, எப்போதும் தமிழக மக்கள் மற்றும் நமது விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் மேற்கொள்வார் என்பது, இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட வேண்டும்!
இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“தமிழக அரசு அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு மூலம் இந்தப் பகுதியை தவிர்த்து மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாயந்த புராதானச் சின்னங்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
எனவே, இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சூழலை பாதுகாக்கும். அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி, பாதுகாக்கப்பட்ட பகுதியில் வரக்கூடிய சுரங்கத்தை மட்டும் கைவிடுவது நோக்கமல்ல. ஒட்டுமொத்த திட்டத்தையும் கைவிட வேண்டும். மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…