central government release 450 crore michang cyclone
மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மீண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிசம்பர் 7) தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதல்வர் ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்துள்ளார். இதற்காக தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புயல் பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் களப்பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருகிறது.
புயல் பாதிப்புகளை சீர் செய்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். ரூ.450 கோடி விடுவித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விரிவாக எடுத்துரைத்துள்ளார். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து நிவாரண தொகையை விரைவில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “மிக்ஜாம் புயலால் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்தார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை, ராணுவம் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தேன். பின்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். நாம் ஒற்றுமையாக இந்த பேரிடரிலிருந்து மீண்டு வருவோம்.
புயல் பாதிப்புகளை மீட்டெடுக்க தேசிய பேரிடர் மீட்பு இரண்டாம் தவணை நிவாரண தொகை ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்தின் கிழ் மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ரூ.500 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது. சென்னை மீண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிவாரண நிதி: முதல்வர் கேட்டது எவ்வளவு? பிரதமர் அறிவித்தது எவ்வளவு?
”தண்ணீர் வடியாத நாடு…. நீர் தேடி சந்திரயான் அனுப்புவது ஏன்?” : பார்த்திபன் ஆதங்கம்!
central government release 450 crore michang cyclone