இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காததற்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலாந்து, தென் கொரியா, யுக்ரேன் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களித்தன.
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் ஆகிய நாடுகள் வாக்களிக்காமல் தீர்மானத்தை புறக்கணித்தன.
இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதுபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள், சிங்களப் பேரின வாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் அறியும்.
இந்நிலையில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அவையின் 51ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு வழக்கம் போல் புறக்கணித்துள்ளது. இதற்கான பொருள் என்னவென்றால், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு பக்கபலமாக, இந்திய ஒன்றிய அரசு துணை நிற்கும் என்பதுதான்.

ஒன்றியத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அவர்கள், சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பார்களே தவிர, மறந்தும் கூட தமிழர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
கடந்த1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை, சிங்களத்தில் ஈழத்தமிழின அழிப்பை தனது அரசகொள்கையாக முன்னெடுத்து, மனித உரிமைகள் வன்முறைகள், போர் குற்றச் செயல்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தபோது,
இந்தியா ஒன்றிய அரசு, உரிய நேரத்தில் அதனைத் தடுக்கத் தவறியதன் விளைவாக, 1,76,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரை இனஅழிப்புக்குள்ளாகினர். அப்போது வராத ஒன்றிய அரசா, ஈழத்தமிழர்களை இப்போது காப்பாற்ற போகிறது?.
ஈழத்தமிழர்களின் தாயகத்தின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து ஒழிப்பதையே இன்றுவரை தங்கள் அரசியல் கொள்கையாகத் தொடர்கிறது. ஆக, ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்களுக்கு, எப்போதும் இந்திய ஒன்றிய அரசு துணை நிற்காது.
மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் என்பது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்பே கணித்ததுதான். இந்திய ஒன்றிய அரசின் இந்த நிலைபாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
விவேகானந்தா சேவாலயம் முற்றுகை: போலீஸ் குவிப்பு!
அக்டோபர் 17: சட்டமன்றத்தில் பன்னீர் இருக்கை-அப்பாவு பதில்!