போதைப்பொருள் புழக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

Published On:

| By Kalai

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிக்க ஒன்றிய அரசே காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசே காரணம்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி இன்று (செப்டம்பர் 1) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அண்மையில் காவல்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாநில அரசால் மட்டும் முடியாது.

ஒன்றிய அரசு முழுவீச்சில் இறங்கவேண்டும். ஒன்றிய அரசால் தான் நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தனியார் துறைமுகங்கள் மூலம் கடத்தல்

குறிப்பாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் வழியாக தான் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் மூலமாக கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை தடை செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

152 டன் போதைப்பொருள் பறிமுதல்

குஜராத் முந்த்ரா, விஜயவாடா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் தான் கடத்தல் அதிகம் நடக்கிறது. துறைமுகங்களை தனியாருக்கு விடாமல் அரசே நடத்தும் பழைய முறையை கொண்டு வந்தால் போதைப்பொருள் கடத்தலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2013- 2021 வரை 32.99 கோடி மதிப்பில் 952 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் திமுக அரசின் நடவடிக்கையால் ஒரே ஆண்டில் ரூ.9.19 கோடி மதிப்பிலான 152 டன் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடுமையான சட்டம் தேவை

10 ஆண்டுகளில் ரூ. 2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 2 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதை கலாச்சாரம் பரவாமல் தடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

கடுமையான சட்டங்கள் இயற்றுவதன் மூலமும், துறைமுகங்களை கண்காணிப்பதன் மூலமும் மட்டுமே போதைப்பொருள் கடத்தலை தடுக்கமுடியும்” என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.

கலை.ரா

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வரைப் பாராட்டிய பாமக நிறுவனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share