“நீட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை” – அமைச்சர் நம்பிக்கை!

Published On:

| By Kalai

நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசு மறுப்பு தெரிவிக்காததால் நம்பிக்கை தொடர்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(டிசம்பர் 17) நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏற்கனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்றும்  தென் சென்னை பகுதி மக்களின் சேவைக்காக பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் கட்டப்பட்டு வருகிறது.

வரும் 2023 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த மருத்துவமனை தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் இருந்து பொதுமக்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும் வகையில் வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 22-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் புதிய கட்டமைப்பை திறந்து வைக்க உள்ளார். இடைநிலை பராமரிப்பு மையம், 75 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையையும் அவர் துவக்கி வைக்கவுள்ளார்.

Central Government has not objected to neet Minister's hope

டிஎம்எஸ் வளாகத்தில் மனம் என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் துவக்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மனநல ஆலோசனைகள் பெற இந்த அமைப்பு செயல்பட உள்ளது” என்றார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன குழப்பம், ஆலோசனைகளை வழங்க, நட்புடன் உங்களோடு என்ற அமைப்பு துவங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு பொதுவான தொலைபேசி எண், மற்றும் விளக்க புத்தகத்தை வரும் 22-ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதையும் அறிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்  நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி தொழில்நுட்ப பிரச்சனை வரும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

மேலும் நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது என அவர் தெரிவித்தார். நீட் விலக்கு குறித்து மத்திய சுகாதாரத்துறை கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதை மா.சு. குறிப்பிட்டார். 

அந்த விளக்கத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும்  தற்போது வரை எந்தவித மறுப்பும் தெரிவிக்காததால் நம்பிக்கை தொடர்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கலை.ரா

பத்திரிகையாளர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம்: புத்தகப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel