விரைவில் அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசின் தேர்வுகள் நடத்த குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன் பதில்களில் இன்று (மே 2) பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி: கலைஞர் நூற்றாண்டு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறதே. அதை எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
பதில்: வருகின்ற ஜூன் 3 அன்று அவருடைய நூற்றாண்டு தொடங்கப்போகிறது. இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி கொண்டாட இருக்கிறோம். ஓராண்டுக் காலம் முழுவதும் தலைவர் கலைஞரின் சாதனைகளை நினைவுபடுத்தி, நன்றி செலுத்தும் ஆண்டாக இருக்கப்போகிறது.
ஜூன் 5-ஆம் நாள், இந்த நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதற்காக மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன்.
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
கேள்வி: கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சியினர், செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை நிறுத்தி வைத்தீர்கள். இது உங்கள் ஜனநாயகப் போக்கையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது.
ஆனால் இதை பலவீனமாக ஒருதரப்பினர் கட்டமைக்க முயல்கிறார்களே?
பதில்: “மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களின் மனசாட்சியே நீதிபதி”-என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன்.
மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி. அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவுமில்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.
கேள்வி: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த நிலை வருமா?
பதில்: விரைவில் வரவேண்டும். அறிவுத் திறனை இந்தி, ஆங்கிலம் என்ற குறிப்பிட்ட மொழி எல்லைக்குள் சுருக்கக் கூடாது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்பதால், எல்லா மாநில இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
விரைவில் அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட குரல் கொடுப்போம். வெல்வோம்.
கேள்வி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?
பதில்: அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.
இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது.
அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
கேள்வி: டெல்லிக்கு சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது?
பதில்: வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே” என்று பதிலளித்தார்.
மோனிஷா
அமித்ஷாவின் வன்மம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!
