தமிழக அரசால் பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யபடுவது தொடர்பாக 4 பேர் கொண்ட பாஜக மத்திய குழுவினர் இன்று(அக்டோபர் 28) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக அக்கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்படி அங்கு வந்த அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்றும்போது பாஜக மற்றும் போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக அரசால், பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட மத்திய குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டார். இந்த அறிவிப்பினை அண்ணாமலையும் வரவேற்று இருந்தார்.
அந்த குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரின் இல்லத்தில் நேற்று மத்திய குழு விசாரணை மேற்கொண்டது.
அதனையடுத்து தற்போது சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக குழு சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த சந்திப்பில் தமிழக அரசால் பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனுவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இதுகுறித்த அறிக்கையையும் பாஜக தேசிய தலைமையிடம் இக்குழு விரைவில் வழங்க உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IND vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… கேப்டன் யார் தெரியுமா?