அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்டோபர் 1) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, ஐடி விங் சார்பில் எல்.இ.டி பதாகைகளை எடப்பாடி திறந்து வைத்த போது, அவர் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது.
அவரது இடது தோள்பட்டை மற்றும் காது மீது பலமாக விழுந்ததில் எடப்பாடி பழனிசாமி சற்று அதிர்ச்சி அடைந்தாலும் செல்போனை தட்டி விட்டு சிரித்த முகமாக காணப்பட்டார்.
அவருக்கு அருகில் இருந்த நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆவேசமடைந்தனர். அங்கிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், “யாருப்பா அது?” என கோபமாக கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில் நிர்வாகி ஒருவரது செல்போன் போட்டோ எடுக்கும் போது தெரியாமல் விழுந்துவிட்டது என்கிறார்கள் அதிமுக தரப்பில்.
இந்தசூழலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி மீது தொலைபேசி எறிந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரிகமான செயலாகும்.
அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைவாகக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் மற்றும் பாதுகாவல் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறார். 2026ல் ஒன்றிணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.
இதுதொடர்பாக நேற்று சேலத்தில் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பிய கேள்விக்கு, “ஓபிஎஸை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டோம். அவர் பேசுவதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது. எனது தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது. இனி இதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
2.5 கிலோ தங்கம் கொள்ளை… இன்ஸ்டா திருடனுக்கு வலைவீச்சு!
7 மாவட்டங்களில் மழை : வானிலை எச்சரிக்கை