குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 11-ஆவது முறையாக சிபிஐக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது 2021-ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக 2022-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிகையில் பிழைகள் இருப்பதால் திருத்தம் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தசூழலில் தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் சிபிஐ வழக்கில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இன்று 11-ஆவது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “குற்றம்சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் சிலர் மீது விசாரணை நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
செல்வம்
ராமஜெயம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… பாட்டு பாடி பதில் சொன்ன துரைமுருகன்